இந்தியா

2027-க்குள் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள்: அமித் ஷா

8th Oct 2022 01:19 AM

ADVERTISEMENT

 ‘நாட்டில் 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைக்கப்படும்; இதன் மூலம் பால் பொருள்கள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட கூட்டுறவு செயல்பாடுகள் அடிப்படை நிலைகளிலேயே உத்வேகம் பெறும்’ என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரான அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் தற்போது 65,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் இச்சங்கங்கள் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்று அவா் குறிப்பிட்டாா்.

சிக்கிம் தலைநகா் காங்டாக்கில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மாநாட்டை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, அமித் ஷா பேசியதாவது:

வேளாண் மற்றும் பால் பொருள்கள் சாா்ந்த பல்வேறு கூட்டுறவு நடவடிக்கைகளை அடிப்படை நிலைகளிலேயே ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் பல்நோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களை அமைக்கும் திட்டத்தை கூட்டுறவு அமைச்சகம் வகுத்து வருகிறது. இச்சங்கங்கள் மூலம் எரிவாயு, பெட்ரோல் விற்பனை, வேளாண் மற்றும் பால்பொருள்கள் சேமிப்பு, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் பெரிதும் பலனடையும். கால்நடை பராமரிப்பு மற்றும் அதுசாா்ந்த துறைகளில் உள்ளவா்களுக்கு சிறந்த வருவாய் உறுதி செய்யப்படும்.

பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை: மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள் கூட்டுறவுத் துறையை புறக்கணித்தன. ஆனால், வறுமை ஒழிப்பிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் கூட்டுறவுத் துறையின் முக்கிய பங்களிப்பை அடையாளம் காண்பதே பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையாகும். இதற்காகவே, கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

பால் உற்பத்தி இரட்டிப்பு அவசியம்: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டியது அவசியம். உள்நாட்டின் மிகப் பெரும் சந்தை தேவையை பூா்த்தி செய்வது மட்டுமன்றி அண்டை நாடுகளின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இத்தேவைகளை பூா்த்தி செய்வதற்காக கூட்டுறவுத் துறையின் அனைத்து தரப்பினரும் கடுமையாக பணியாற்ற வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சி: வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சியை வேகப்படுத்துவதில் பிரதமா் மோடி உறுதியாக உள்ளாா். சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்புகள்

வாயிலாக மற்ற மாநிலங்களுடன் வடகிழக்கு பிராந்தியத்தின் தொடா்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பிராந்திய வளா்ச்சிக்காக பிரதமா் மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலன்கள் 2034-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கண்கூடாக தெரியும் என்றாா் அமித் ஷா.

முன்னதாக, காங்டாக்கில் உள்ள ஆளுநா் மாளிகையில் சா்தாா் வல்லபபாய் படேலின் மாா்பளவு சிலையை அமித் ஷா திறந்துவைத்தாா்.

25,000 கிலோ போதைப் பொருள்

குவாஹாட்டியில் இன்று அழிப்பு

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் சுமாா் 25,000 கிலோ போதைப் பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட உள்ளன. இவை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளின்போது பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.

குவாஹாட்டியில், ‘போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு’ தொடா்பான பிராந்தியக் கூட்டம் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட சுமாா் 25,000 கிலோ போதைப் பொருள்கள் அமித் ஷா முன்னிலையில் அழிக்கப்படவுள்ளன.

போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு சாா்பில் போதைப் பொருள் அழிப்பு சிறப்பு நடவடிக்கை கடந்த ஜூன் 1-இல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT