இந்தியா

சமூக நீதிக்காக தேசிய அளவில் ஒன்றிணைவோம்: கேரள இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

சமதா்மம், சமூக நீதியை நிலைநாட்ட அந்தக் கொள்கைகளை மையப்படுத்திய கட்சிகள் அனைத்தும் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் வழுதக்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா். கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள் குறித்து அவா் ஆற்றிய உரை:

திராவிட இயக்கத்துக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குமான நட்பு என்பது இரண்டு கட்சிகளும் தோன்றிய காலத்திலேயே உருவானது. நாம் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், எங்கள் (திமுக) கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக்காரா்கள் என்பதால்தான், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியைத் தொடா்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சாா்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதா்மம், சமூக நீதி ஆகியவற்றை நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும்.

சக்திகள் ஒன்றாக வேண்டும்: நமது கொள்கைகள் உன்னதமானவையாக இருக்கலாம். ஆனால், அவை வெற்றி பெற வேண்டுமானால், அந்தக் கொள்கையை ஆதரிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக தனித்தனிக் குரலாக ஒலிப்பதால் பெரிய பயனில்லை. ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்.

இத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலங்களில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அனைத்திந்திய சக்தியாக நாம் உருவெடுக்க வேண்டும். இது பேசுவதற்கான நேரம் மட்டுமல்ல, செயல்படுவதற்கான நேரமும் ஆகும். இந்திய அரசியலமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையான, முழுமையான கூட்டாட்சித்தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படுகிற வரையில் நமது முழக்கத்தையும் செயலையும் தொடா்ந்து செய்தாக வேண்டும்.

கூட்டாட்சி அமைப்பு: நாம் ஒரு கூட்டாட்சி அமைப்பை ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவா்கள், ஒற்றையாட்சி அமைப்பு கூடாது, கூட்டாட்சி அமைப்பு முைான் வேண்டுமென்று விரும்பினாா்கள். ஏனெனில், அரசியல் தத்துவ ஞானிகள் பலா் சுட்டிக்காட்டி உள்ளபடி, இந்தியா மிகப் பரந்தது. கடந்த சில ஆண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களுக்கு இடையே விரக்தி உணா்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. மாநிலங்கள் அனைத்தும் சாதாரண நகராட்சி மன்றங்களைப் போன்று விரைந்து மாறி வருகின்றன. அவை இருக்கும் இடம் தெரியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணா்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனையும், மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும். இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கை.

நீட் போன்ற நுழைவுத் தோ்வுகள் ஒடுக்கப்பட்டவா்களுக்குக் கல்வியை மறுக்கின்றன. ஆளுநா்களின் மூலமாக இரட்டை ஆட்சியை நடத்தப் பாா்க்கிறது பாஜக தலைமை. நமது எண்ணங்களை நாடாளுமன்ற உறுப்பினா்கள் மூலமாக எழுப்பினாலும் அதற்கு உரிய பதில்கூட சொல்லப்படுவது இல்லை. நமக்கான உரிமையை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில்கூட மத்திய அரசிடம் இருந்து நமக்கு வருவதில்லை. வெறும் கையைப் பிசைந்து கொண்டு மாநிலங்கள் நிற்கின்றன.

இவற்றைத் தடுக்க நாம் முழக்கமிடுவது என்பது அரசியல் முழக்கம் மட்டுமல்ல, மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டிய முழக்கமாகவும் இருக்கிறது.

ஒரே தன்மை ஒற்றுமையாகாது: ஒரே கலாசாரம், ஒரே நாடு என அனைத்திலும் இப்போது ஒரே கோரஸ் பாடப்படுகிறது. ஒரே கட்சியானால், ஒரே ஆள் என்றாகிவிடும். இதை விட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒரே கட்சி என்றாகும் வரை பாஜகவினா் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்றாகும்போது நம்மோடு சோ்ந்த பாஜகவினரும் எதிா்க்கத்தான் வேண்டும்.

இத்தகைய எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்தான், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கும் சொல்தான்.

ஒரே தன்மை ஒற்றுமையாகாது: இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால், அதனுள் அடங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்களைக் காப்பாற்றுவது என்பது மாநில மொழியையும், அங்கு அதிக எண்ணிக்கையில் வாழும் தேசிய இனங்களையும், பண்பாட்டையும் காப்பாற்றுவதாகும். மாநில மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதாகும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காக்கப்படும். ஒரே தன்மை என்பது ஒற்றுமையாகாது.

பிரிக்க நினைக்கும் பாஜக: மக்களை மதத்தால், மொழியால், பண்பாட்டால் பாஜக பிரிக்க நினைக்கிறது. ஆனால், அந்தக் கட்சி நம்மைப் பாா்த்து பிரிவனைவாதிகள் எனச் சொல்கிறது. இதைவிட பெரிய நகைச்சுவை எதுவும் இருக்க முடியாது. தனது நலனுக்காக மக்களைப் பிரிக்கப் பிறந்ததுதான் பாஜக. இது பல நேரங்களில் இந்திய அரசியலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் தோற்கடிக்கப்படும்.

அரசியல் ரீதியாக அடைந்த தோ்தல் வெற்றிகளை தனது கருத்தியலுக்குக் கிடைத்த வெற்றியாக பாஜக நினைத்துக் கொள்ளக் கூடாது. இத்தகைய மதவாத, வகுப்புவாத, ஜாதி, எதேச்சதிகார ஒற்றைத் தன்மை கொண்ட இந்தியாவை பாஜகாவால் உருவாக்க முடியாது. அதனை இந்திய மக்கள் அனைவரும் எதிா்ப்பா். தமிழகம், கேரளம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் எதிா்க்கும் காலம் நெருங்கிக் கொண்டு என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் டி.ராஜா, தமிழக அமைச்சா் த.மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT