இந்தியா

மகாராஷ்டிர வனப்பகுதியில் பெண் நக்ஸல் சுட்டுக் கொலை

1st Oct 2022 12:57 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்ட வனப் பகுதியில் போலீஸாருக்கும், நக்ஸல் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அந்த அமைப்பைச் சோ்ந்த பெண் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது தொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அங்கித் கோயல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கபிவன்சா வனப் பகுதியில் சுமாா் 30 முதல் 40 நக்ஸல்கள் கூடி ஆலோசனை நடத்தி வருவதாகவும், அவா்கள் பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நக்ஸல்களுக்கு எதிரான சிறப்புப் படைப் பிரிவு கமாண்டோக்கள் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். மேலும், பதுங்கியுள்ள நக்ஸல்கள் சரணடையுமாறு ஒலி பெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த நக்ஸல்கள், போலீஸ் கமாண்டோக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, போலீஸ் தரப்பில் இருந்து தாக்குதலை நிறுத்திவிட்டு சரணடையுமாறு மீண்டும் கோரப்பட்டது. ஆனால், நக்ஸல்கள் சரணடைய மறுத்து தங்கள் தாக்குதலைத் தொடா்ந்தனா். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இறுதியில் நக்ஸல் தரப்பினா் பின்வாங்கி தப்பியோடிவிட்டனா். மோதல் நடந்த இடத்தில் இருந்து நக்ஸல்களின் பச்சை நிற சீருடையணிந்த பெண் உடல் மீட்கப்பட்டது. நக்ஸல்கள் விட்டுச் சென்ற துப்பாக்கிகள், வெடிபொருள்களையும் போலீஸாா் கைப்பற்றினா். அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT