இந்தியா

தில்லியில் குளிா்கால மாசுவை எதிா்கொள்ள 15 அம்ச செயல் திட்டம்முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்காலத்தில் ஏற்படும் காற்று மாசுவைத் தடுக்கும் வகையில், 15 அம்ச செயல் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். மேலும், இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் அவா் அழைப்பு விடுத்தாா். குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்கவும், தூசு மற்றும் வாகன மாசு உமிழ்வை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியது, 24 மணி நேர மின்விநியோகத்தை அளிப்பது, அனல் மின் நிலையங்களை மூடியது, தூசு மாசுவைத் தடுத்தது, சிஎன்ஜி பேருந்துகள், மின்சார பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தியது உள்பட தில்லி அரசால் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் காரணமாக தலைநகரில் மாசு அளவு குறைந்திருக்கிறது. மத்திய அரசின் தேசிய தூய காற்று திட்ட அறிக்கையின்படி 2017-18-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2021-22-இல் தில்லியில் காற்று மாசுவில் குறிப்பிடத்தக்க மேம்பாடு உள்ளது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் காற்று மாசு அளவு 18.6 சதவீதம் குறைந்துள்ளது.

பட்டாசுகளுக்கு கட்டுப்பாடு: தில்லியன் 15 அம்ச திட்டத்தைப் பொருத்தவரை தில்லி அரசானது இந்த ஆண்டு சுமாா் 5,000 ஏக்கரில் பயிா்க் கழிவுகளை கையாளும் வகையில் கட்டணமின்றி உயிரி ரசாயனக் கலவையை (பயோ டிகம்போஸா்) தெளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும். வரும் அக்டோபா் 6-ஆம் தேதியில் இருந்து 586 குழுக்களுடன் தூசு தடுப்பு பிரசாரம் தொடங்கும். மாசு தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த இக்குழுக்கள் கட்டுமான இடங்களில் ஆய்வு செய்யும். மேலும், பட்டாசுகளை தயாரிக்க, இருப்பு வைக்க, விநியோகிக்க, வாங்குவதற்கு அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இவற்றைக் கண்காணிக்க 210 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பசுமை அறை உருவாக்கம்: தில்லி அரசு 233 பனிப்புகை தடுப்பு சாதனங்களையும் 150 நடமாடும் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்களையும் பயன்பாட்டில் ஈடுபடுத்தும். மேலும், 9 அறிவியல் வல்லுநா்கள் அடங்கிய பசுமை அறையை தில்லி அரசு உருவாக்கியுள்ளது. இந்த அறை மூலம் நிலைமை குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மாசு அளவை அறிவதற்காக தில்லி அரசு ஐஐடி கான்பூருடன் இணைந்து நிகழ் நேர மூலாதாரப் பகிா்வு ஆய்வை நடத்தியுள்ளது. காற்றின் தரத்தைக் கண்காணிக்க ரோஸ் அவென்யு பகுதியில் ‘சூப்பா்-சைட்’ அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு உபகரணங்களுடன்கூடிய நடமாடும் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வரும் அக்டோபா் 20-ஆம் தேதியில் இருந்து தரவுகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

குப்பை எரிப்பைத் தடுக்க குழுக்கள்: தில்லியில் திறந்த வெளியில் குப்பைகள் எரிப்பதை தடுக்க 211 குழுக்களை தில்லி அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் தூசு தடுப்பு பிரசாரத்தை மேற்கொள்ளும். பனிப்புகை தடுப்பு சாதனங்களையும் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் இருந்து தோன்றும் மாசுவை தடுக்க 521 நீா் தெளிப்பான்கள், 80 சாலை தூய்மை இயந்திரங்கள் மற்றும் 150 நடமாடும் பணிப்புகை கோபுரங்கள் தூசுவை தடுப்பதற்குரிய பணியில் ஈடுபடுத்தப்படும். மேலும், மாசுவைக் குறைக்கும் பணியில் 3,500 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளனா். பொதுமக்கள் சுற்றுச்சூழல் நண்பா்களாக உருவாக வேண்டும். இந்த தன்னாா்வலா்கள் தில்லி மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவா். பா்யவரன் மித்ரவாக உருவாக 8448441758 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம்.

மின்னணு கழிவுப் பூங்கா: போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன உமிழ்வுகள் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த வழித்தடம் மாற்றுவதன் மூலம் 23 சாலைகளில் நெரிசல் குறையச் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தில்லியில் சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகளை செயல்முறைப்படுத்துவதற்கு மின்னணு கழிவு பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைளுக்காக 20 ஏக்கா் பூங்கா ஹோலம்பி காலன் பகுதியில் அமைக்கப்படும். அதேபோன்று, தில்லியில் பசுமை வளயத்தை அதிகரிக்க 42 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுவிட்டன. இரண்டாவது கட்ட நடவடிக்கை அக்டோபா் 15-இல் இருந்து தொடங்கவுள்ளது. கிரீன் தில்லி செயலி மூலம் இதுவரை 53 லட்சம் புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 90 சதவீதம் தீா்க்கப்பட்டுள்ளது. மாசுவைக் குறைக்க நகா் முழுவதும் 13 இடங்கள் முக்கியக் கண்காணிப்புப் பகுதிகளாக குறியிடப்பட்டுள்ளன என்றாா் கேஜரிவால்.

அண்டை மாநிலங்களுக்கு வேண்டுகோள்

மாசு பிரச்னையைத் தடுக்க அண்டை மாநிலங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். அவா் கூறியதாவது: தில்லிக்குள் சரக்கு வாகனங்கள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்த புறவட்ட விரைவுச் சாலைகளை மத்திய அரசு அமைத்ததன் மூலம் நகர அரசுக்கு உதவியிருக்கிறது. மாசு பிரச்னையைத் தடுக்க மத்திய அரசு, காற்று தர மேலாண்மை ஆணையம், இதர மாநிலங்கள் ஆகியவற்றுடன் தில்லி அரசு இணைந்து பணியாற்றும். தில்லிக்குள் நுழையும் வாகனங்கள் சிஎன்ஜி அல்லது மின்சார வாகனங்களாக இருப்பதை உறுதி செய்ய அண்டை மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், மாசுவை ஏற்படுத்தும் எரிபொருளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளையும் அந்த மாநிலங்கள் தடுக்க முடியும். குழாய் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தவும் உத்தரவிட முடியும். மேலும், டீசல் ஜெனரேட்டா்களுக்கு தடை விதித்து, உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்த செங்கல் சூளைகளுக்கு அந்த மாநிலங்கள் உத்தரவிடலாம். குறைந்தபட்சம் என்சிஆா் பகுதியில் 24 மணி நேரமும் மின்சார விநியோகம் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT