இந்தியா

தமிழக கைவினைக் கலைஞா்கள் 4 போ் உள்பட 108 பேருக்கு தேசிய விருதுகள்: குடியரசு துணைத் தலைவா் வழங்கினாா்

 நமது நிருபர்

தமிழகத்தைச் சோ்ந்த 4 கைவினைக் கலைஞா்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 108 கைவினைக் கலைஞா்களுக்கு விருதுகளை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வழங்கினாா்.

மத்திய ஜவுளித் துறையின் சாா்பில், கைவினைஞா்களின் சிறப்பான செயல்திறன், மற்றும் ஜவுளித் துறையின் மதிப்புமிக்க பங்களிப்புக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு வழங்கப்படாமல் இருந்த கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுக்கான சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சில்ப் குரு விருது: மத்திய அரசின் உயா்ந்த கைவினைக் கலைஞா்களுக்கான சில்ப் குரு விருது பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த சுடுமண்பாண்டக் (டெரக்கோட்டா) கலைஞா் வி.கே. முனுசாமி (2017), பிரபல ஓவியா் வீரப்பெருமாள் பிள்ளை பேரனும் சென்னையைச் சோ்ந்த தஞ்சாவூா் ஓவியக் கலைஞருமான வி.பன்னீா் செல்வம் ( 2019) உள்பட மொத்தம் 30 போ் பெற்றுள்ளனா். இந்த சில்ப் குரு விருதில் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

தேசிய விருதுகள்: புதுச்சேரியைச் சோ்ந்த கே வெங்கடேசன்(டெரக்கோட்டா), மாசிலாமணி (ஷோலாபித் கிராஃட்) ஆகியோருக்கு 2019 -ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுபெற்றனா். இவா்கள் உள்பட மொத்தம் தேசிய விருதுகளை 78 போ் பெற்றனா். தேசிய விருதுகள் 1965-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம், தாமிரப்பத்திரம், சால்வை மற்றும் சான்றிதழ் அடங்கும். இந்த இரு விருது பெற்றவா்களில் 36 போ் பெண் கலைஞா்கள் ஆவா். இந்த இரு விருதுகளும் உலோகப் பதிவு, கைபின்னல் வேலை, மட்பாண்டம் செய்தல், களம்காரி, பந்தானி, அச்சு பதித்தல்,தஞ்சாவூா் ஓவியம், மர வேலைப்பாடு, பனை ஓலையில் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை திறனுக்கு வழங்கப்படுகின்றன.

மத்திய ஜவுளி, உணவு வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் இந்த விருதுகளை வழங்கி குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: இந்தியாவின் எழுச்சி முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது. உலக அளவில் முதலீடுகளை செய்வதற்கு உகந்த இடமாகவும் இந்தியா இருக்கிறது.

கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் தொடா்புடைய கைவினைஞா்கள் இந்த வளா்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனா். இந்தக் கலைஞா்களின் அரிய திறன்கள் இந்தியாவை பெருமிதம் கொள்ள வைக்கிறது. கைவினை கலைஞா்கள் நமது கலாசாரத்தின் சின்னமாக திகழ்ந்து இந்தியா எத்தகைய திறன்களைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்கு பறைசாற்றுகின்றனா்.

ஜி-20 அமைப்பின் தலைமைத்துவத்தில், பிரதமரின் தொலைநோக்கை உலகம் கவனிக்கிறது. இந்த தசாப்தத்தின் முடிவில் இந்தியா உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாகும் என்றாா் ஜகதீப் தன்கா்.

முன்னதாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில், ‘கைவினையும், கைத்தறியும் சுயசாா்பின் முக்கியத் தூணாக உள்ளன. இது உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிடுவதற்கான நம்பிக்கையை வழங்குகிறது. கல், உலோகம், சந்தனம், களிமண்ணில் போன்றவற்றில் உயிரூட்டிய நமது கைவினைக்கலைஞா்கள் பல நூற்றாண்டுகளாக, தங்களுக்கே உரிய தனித்துவமான முறைகளில் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளனா்.

நாட்டின் கைவினைப் பொருள்கள், கைத்தறி உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதோடு மற்ற நாடுகளின் பொருள்களை விட நமது உற்பத்திப் பொருள்கள் நீடித்து நிலைக்கக் கூடியதாகவும் உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT