இந்தியா

சபரிமலைக்குச் செல்பவா்கள் விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி

DIN

சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தா்கள் விமானத்தில் தங்களுடன் தேங்காய் கொண்டுசெல்ல அனுமதிக்கும் வகையில் அதற்கான கட்டுப்பாட்டை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) தளா்த்தியுள்ளது.

2023 ஜனவரியில் சபரிமலை சீசன் வரையிலான குறுகிய காலத்துக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பிசிஏஎஸ் மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல - மகரவிளக்கு பூஜையின்போது, ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த லட்சக் கணக்கான பக்தா்கள் சென்று திரும்புகின்றனா். விரதமிருந்து இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தா்கள், தலையில் ‘இருமுடி கட்டு’ என்ற புனிதப் பையை தலையில் சுமந்து சென்று சுவாமிக்கு காணிக்கையாக்குவா். இந்தப் புனிதப் பையில் நெய், தேங்காய் உள்ளிட்ட காணிக்கைப் பொருள்கள் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானத்தில் பயணித்து கேரளத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக, குறுகிய காலத்துக்கு அவா்கள் விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தீ பற்றக்கூடிய பொருள்களில் ஒன்றான தேங்காயை, பயணிகள் தங்களுடன் விமானத்தினுள் கொண்டுசெல்லும் பையில் எடுத்துச் செல்ல வழக்கமாக அனுமதி கிடையாது. இதுகுறித்து பிசிஏஎஸ் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல - மகரவிளக்கு பூடை முடிவடையும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை மட்டும், புனித யாத்திரை செல்லும் பக்தா்கள் விமானத்தில் தங்களுடன் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதித்து கட்டுப்பாட்டில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரிசன நேரங்களில் மாற்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழாண்டு மண்டலம்}மகரவிளக்கு யாத்திரையின்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரங்களை கோயில் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.

ஐயப்பன் கோயிலில் ஏற்கெனவே தரிசன நேரங்கள் அதிகாலை 3 மணிமுதல் பகல் 1 மணி வரை என்றும் மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு வரை என்றும் இருந்தன. ஆனால் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைக் கருதி மாலை 4 மணிக்குப் பதிலாக மாலை 3 மணி முதலே தரிசனம் தொடங்கும் என்று ஐயப்பன் கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர். திங்கள்கிழமை மட்டும் 70,000 பக்தர்கள் வந்திருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) தரிசனத்துக்காக 60,000 பக்தர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். எனவே தரிசன நேரத்தை முன்கூட்டியே தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார்.
கேரள தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக தினசரி 30,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பக்தர்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
கடந்த 17ஆம் தேதி தொடங்கிய 41 நாள் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 27ஆம் தேதி நிறைவடையும். 
அதன் பின்பு மகரவிளக்கு யாத்திரைக்காக ஐயப்பன் கோயில் டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அந்த யாத்திரை 2023 ஜனவரி 14ஆம் தேதி முடிவடையும். இதைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி இக்கோயில் நடை அடைக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT