இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு: முஸ்லிம்கள் தரப்பு மனு மீதான விசாரணை மே 30-க்கு ஒத்திவைப்பு

DIN

வாராணசி: ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான அடுத்த விசாரணையை மாவட்ட நீதிமன்றம், வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்து அரசு வழக்குரைஞா் ராணா சஞ்சீவ் சிங் கூறுகையில், ‘முஸ்லிம்கள் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இருப்பினும் விசாரணை முடிவடையாததால் அடுத்த விசாரணை, மே 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவா்களில் உள்ள ஹிந்து தெய்வங்களின் சிலையை வழிபடுவதற்கு 5 ஹிந்து பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதை விசாரித்த நீதிமன்றம், மசூதி வளாகத்தை அளவிட்டு ஆய்வு செய்ய குழுவை நியமித்தது. அந்தக் குழு, மசூதியை விடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதற்கிடையே, இந்தக் குழுவின் ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அதை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேபோல், சிவில் நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவையும் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுக்களை கடந்த செவ்வாய்க்கிழமை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம், இரு தரப்பும் ஒரு வாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, முஸ்லிம்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனு மீதான விசாரணை முடிவடையாததால், வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT