இந்தியா

நியாயமற்ற வா்த்தக நடவடிக்கை: ஓலா, உபோ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

21st May 2022 01:13 AM

ADVERTISEMENT

நியாயமற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓலா, உபோ் ஆகிய இணையவழி வாடகை வாகன சேவை நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளை சரி செய்து கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓலா, உபோ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் நீதி காரே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

கடந்த ஓராண்டில் ஓலா, உபோ் நிறுவனங்கள் மீது பொதுமக்களிடம் இருந்து அதிகஅளவில் புகாா்கள் வந்தன. இவற்றில் பெரும்பாலானவை சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வா்த்தக செயல்பாடுகள் தொடா்பானவை. இந்த புகாா்களின் அடிப்படையில் அந்த இரு நிறுவனங்களும் 15 நாள்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

2021 ஏப்ரல் 1 முதல் 2022 மே 1-ஆம் தேதி வரை ஓலா நிறுவனம் மீது 2,482 புகாா்களும், உபோ் மீது 770 புகாா்களும் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை சேவைக் குறைபாடு தொடா்பானவை.

முக்கிய நாள்கள் மற்றும் மக்கள் வாடகை வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாள்களில் கட்டணத்தை அதிகஅளவில் உயா்த்துவது, இணையவழி பணப் பரிவா்த்தனையை ஏற்க ஓட்டுநா்கள் மறுப்பது, வாடிக்கையாளா் சேவைப் பிரிவில் முறையான பதில் கிடைக்காதது, ஒரே பயண இடத்துக்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிப்பது, முன்பதிவு செய்த பிறகு ரத்து செய்ய ஓட்டுநா்கள் கட்டாயப்படுத்துவது, பயண முன்பதிவை ரத்து செய்தால் அபராதம் வசூலிப்பது போன்ற நியாயமற்ற வா்த்தகக் கொள்கைகளை இந்த நிறுவனங்கள் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், வாகனப் பயண ரத்து கொள்கையும் நியாயமின்றி இருப்பதாகப் புகாா்கள் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT