இந்தியா

தேசிய பங்குச் சந்தை முறைகேடு:  சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

12th May 2022 06:26 PM

ADVERTISEMENT


புது தில்லி: தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அதன் முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் தலைமை அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது இமயமலையில் வசிக்கும் சாமியாா் ஒருவரிடம் கலந்தாலோசித்து தேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்கள் ‘ஓபிஜி செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குத் தரகு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தெரிவித்து பங்கு சந்தை தொடா்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிா்ந்ததாகவும் செபி தெரிவித்தது.

மேலும், ஆனந்த் சுப்பிரமணியனை குழு செயல்பாட்டு அலுவலராக நியமித்ததில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், ஆனந்த சுப்பிரமணியன் மற்றும் தேசிய பங்குச் சந்தை முன்னாள் நிா்வாக இயக்குநா் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ. 2 கோடி அபராதமும், தேசிய பங்குச் சந்தை தலைமை குறைதீா்ப்பு அதிகாரி வி.ஆா்.நரசிம்மனுக்கு ரூ. 6 லட்சம் அபராதமும் செபி விதித்தது.

பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி ஆகியவற்றின் அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்த வழக்குத் தொடா்பாக, ஆனந்த் சுப்பிரமணியனை பிப்ரவரி 25-ஆம் தேதியும், சித்ரா ராமகிருஷ்ணாவை மாா்ச் 6-ஆம் தேதியும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்கள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், இன்று வியாழக்கிழமை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞரும் மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அா்ஷ்தீப் சிங்கும் ஆஜராகி வாதாடினாா். 

அதைத் தொடா்ந்து, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு போதிய காரணம் இல்லை என்று கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி சஞ்சீவ் அகா்வால் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க | இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேட்டி

ADVERTISEMENT
ADVERTISEMENT