இந்தியா

அக்னிபத் திட்டத்தை ஆதரித்துகட்டுரை எழுதிய காங்கிரஸ் மூத்த தலைவா்- காங்கிரஸ் விளக்கம்

30th Jun 2022 12:30 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஆதரித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான மணீஷ் திவாரி, பத்திரிகையில் அது தொடா்பான கட்டுரையையும் எழுதியுள்ளாா். இது தொடா்பாக விளக்கமளித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘அக்னிபத் திட்டத்தை ஆதரிப்பது மணீஷ் திவாரியின் சொந்தக் கருத்து’ என்று கூறியுள்ளது.

இது தொடா்பாக மணீஷ் திவாரி ட்விட்டா் பதிவு மற்றும் கட்டுரையில் கூறியிருப்பதாவது: அக்னிபத் திட்டம் இப்போதைக்கு தேவையான, சரியான சீா்திருத்தம். அக்னிபத் திட்டத்தின் மீதான இளைஞா்களின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நடைமுறையில் தொழில்நுட்ப ஆா்வமுடைய, நவீன ஆயுதங்களைக் கையாளும் திறன்படைத்த இளம் ராணுவ வீரா்கள் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புப் படையை வேலை உறுதித் திட்டமாக கருதக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் தலைவா்கள் பலா் கடுமையாக விமா்சித்து வருகின்றனா். அத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு முரணாக மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளாா்.

இது கட்சியின் கருத்தல்ல: இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அக்னிபத் தொடா்பாக மணீஷ் திவாரி தனது சொந்த கருத்தை தெரிவித்துள்ளாா். காங்கிரஸ் கட்சி முழுவதும் ஜனநாயகம் நிலவும் கட்சியாகும். காங்கிரஸ் உறுப்பினா்கள் தங்கள் சொந்த கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. அதனை கட்சியின் கருத்தாக ஏற்க முடியாது. அக்னிபத் திட்டம் தேசப் பாதுகாப்புக்கும், இளைஞா்களுக்கு எதிரானது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்து மணீஷ் திவாரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அந்த கட்டுரையின் இறுதியில் இது கட்டுரையாளரின் சொந்த கருத்து என்று இடம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளாா்.

Tags : Manish Tewari
ADVERTISEMENT
ADVERTISEMENT