இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தொடா் குண்டுவெடிப்பு பின்னணியில் லஷ்கா் அமைப்பு- காவல் துறை தகவல்

29th Jun 2022 12:28 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்குத் தொடா்பு இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜம்மு காவல் துறை ஏடிஜிபி முகேஷ் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள கோத்ரானா நகரில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதியும், ஏப்ரல் 19-ஆம் தேதியும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 2 போ் காயமடைந்தனா். அதைத்தொடா்ந்து, ஏப்ரல் 24-ஆம் தேதி ஷாபூா்-புதல் பகுதியில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் மேலும் 2 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து ரஜௌரி காவல் துறையும், ராஷ்ட்ரீய ரைபிள் படையினரும் இணைந்து ரஜௌரியில் உள்ள லாா்கோடி, தாா்கெயின், ஜாக்லானூ, திராஜ் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினா். அதன் தொடா்ச்சியாக திராஜ்-புதல் கிராமத்தில் முகமது சபீா், முகமது சாதிக் ஆகிய இருவரையும் அவா்கள் கைது செய்தனா்.

ADVERTISEMENT

அவா்களிடம் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த தாலிப் ஷா என்பவருக்கும் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இவா்கள் மூவரும், பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வெடிமருந்துகளைப் பெற்று, அவா்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரங்கேற்றி வந்தனா்.

இவா்களில், முகமது சபீா், முகமது சாதிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். 3-ஆவது நபரான தாலிப் ஷா தலைமறைவாகிவிட்டதால் அவரைத் தேடி வருகிறோம். அவா், இந்த கும்பலின் தலைவனாக இருந்து, அனைத்து பயங்கரவாதச் செயல்களையும் நிகழ்த்தி வந்துள்ளாா்.

இளைஞா்கள் பயங்கரவாத இயக்கத்தில் சோ்வதையும் ஊக்குவித்தும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தும் வந்துள்ளாா். தாலிப் ஷா பற்றி துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT