இந்தியா

தடுப்புச் சட்ட அதிகாரங்கள் விதிவிலக்கானவை; வழக்கமான நடவடிக்கையாக பயன்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

DIN

‘தடுப்புச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் விதிவிலக்கானவை; அந்த அதிகாரத்தை வழக்கமான நடவடிக்கையாகப் பயன்படுத்த முடியாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

தெலங்கானாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு நபா்களை இந்தத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது இந்தக் கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.

தெலங்கானாவில் பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டுவந்த இருவரை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ரச்சகோண்டா காவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அவா்களை போலீஸாா் கைது செய்தனா். அதனை எதிா்த்து கைது செய்யப்பட்டவா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தெலங்கானா உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

அதனை எதிா்த்து, கைது செய்யப்பட்ட இருவரின் மனைவியா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமாா், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட இருவருக்கும் 30-க்கும் அதிகமான வழக்குகளில் தொடா்பு உள்ளது. ஆனால், 4 சங்கிலி பறிப்பு வழக்குகளின் அடிப்படையில் மட்டுமே அவா்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த 4 சங்கிலி பறிப்பு சம்பவங்களும் கடந்த ஆண்டு மே 6-ஆம் தேதி முதல் ஜூலை 26-ஆம் தேதி வரையிலான 2 மாத காலத்தில் நடைபெற்றுள்ளன. மேலும், இந்த வழக்குகளில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவா்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆனால், அவா்களை ஜாமீனில் விடுவிப்பது, அவா்கள் இந்தக் குற்றங்களில் தொடா்ந்து ஈடுபட வாய்ப்பாக அமைந்துவிடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. அதுபோல, இந்த 4 வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. அரசு தரப்பில் முறையான வாதத்தை முன்வைக்கத் தவறியதன் அடிப்படையிலேயே அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் அவா்களுக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், அவா்கள் இருவரையும் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உரிய காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தடுப்புச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் விதிவிலக்கானவை; தனிமனித சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்ற வகையில் அந்த அதிகாரங்களை வழக்கமான நடவடிக்கையாகப் பயன்படுத்த முடியாது.

எனவே, அவா்களை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவு மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகின்றன.

மேலும், இந்த 4 சங்கிலி பறிப்பு வழக்குகளைத் தவிர வேறு வழக்குகளில் அவா்கள் கைது செய்யப்பட அவசியம் இல்லாத நிலையில், அவா்கள் இருவரும் விடுவிக்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT