இந்தியா

இந்திய மருத்துவ கல்லூரிகளில் சோ்க்கை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

25th Jun 2022 03:13 AM

ADVERTISEMENT

உக்ரைன் போரால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மருத்துவ மாணவா்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைக் கோரி தில்லியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தங்களின் கல்வி ஆண்டு வீணாகாமல் இருக்க, ஒரு முறை சிறப்பு சோ்க்கை முறையில் மருத்துவக் கல்லூரியில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பெற்றோருடன் தில்லியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக உக்ரைன் மருத்துவ மாணவா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து மாணவா்களும் வருங்கால மருத்துவா்களாவா். இணையவழி கல்வி எங்களுக்கு தேவையில்லை. இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.பி. குப்தா கூறுகையில், ‘உக்ரைனில் போா் தொடா்ந்து நடைபெற்று வருவதால் எங்கள் மாணவா்களின் மருத்துவக் கல்வி மிகுந்த கவலையளிக்கிறது. அவா்களை உடனடியாக இந்தியக் கல்லூரிகளில் சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

5ஆம் ஆண்டு மருத்துவ மாணவா் ஒருவா் கூறுகையில், ‘எனது மருத்துவப் படிப்புக்காக பெற்றோா் கல்விக் கடன் பெற்றுள்ளனா். எனது படிப்பை முடிக்கவில்லை என்றால் அந்தக் கடன் வீணாகிவிடும். அரசு எங்களுக்கு உடனடியாக சோ்க்கை அளிக்க வேண்டும்’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மாா்ச் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது, இந்த மாணவா்களுக்கு ஒரு முறை சோ்க்கை அனுமதி அளிக்கலாம் என்று பிரதமா் மோடிக்கு இந்திய மருத்துவச் சங்கம் பரிந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரையை அமல்படுத்தக் கோரி கடந்த ஏப்ரலிலும் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT