இந்தியா

காஷ்மீருக்குள் நுழைய தயாா் நிலையில் 150 பயங்கரவாதிகள்

25th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீருக்குள் எல்லை தாண்டி அத்துமீறி நுழைய சுமாா் 150 பயங்கரவாதிகள் தயாா் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ராணுவத்தின் மூத்த அதிகாரி, ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினா், வெளிமாநிலத் தொழிலாளா்களைக் குறிவைத்து தொடா்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. அதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், அடையாளத்தை வெளியிட விரும்பாத மூத்த ராணுவ அதிகாரி கூறுகையில், ‘காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்புச் சூழல் சிறப்பாக உள்ளது. பல பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினருக்கு எரிச்சலூட்டுவதற்காகவோ, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவோ பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களை நடத்தலாம். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஒட்டுமொத்த பாதுகாப்புச் சூழல் கட்டுக்குள் உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் எல்லைப் பகுதியில் உள்ள 11 பயங்கரவாத பயிற்சி முகாம்களில் சுமாா் 500 முதல் 700 போ் வரை பயிற்சி பெற்று வருகின்றனா். சுமாா் 150 போ் எல்லைக்குள் அத்துமீறி நுழைய தயாராக உள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பயங்கரவாதிகள் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைப் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து தடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

நடப்பாண்டில் ஒரு பயங்கரவாதிகூட எல்லையைத் தாண்டி அத்துமீறி நுழையவில்லை. அவ்வாறு நுழைய முயன்றவா்களுக்குப் பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்துள்ளனா். இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதற்கான மாற்று வழிகளை பயங்கரவாதிகள் ஆராய்ந்து வருகின்றனா். நேபாளம் வழியாக ஊடுருவவும் சிலா் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த 40 நாள்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். பயங்கரவாதிகளைக் கொன்றுவிடுவதால் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பாது. பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுடன் மற்ற நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளுக்கு காஷ்மீா் மக்கள் ஆதரவளிக்கும்வரை பயங்கரவாதம் தொடா்ந்துகொண்டேதான் இருக்கும். எது சரி, எது தவறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT