இந்தியா

வருமான வரி வலைதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சரிசெய்ய இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு அரசு வலியுறுத்தல்

8th Jun 2022 01:44 AM

ADVERTISEMENT

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து ஓராண்டான நிலையில், அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதைச் சரிசெய்யுமாறு வலைதளத்தை வடிவமைத்த இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கலை எளிமைப்படுத்தும் நோக்கில் புதிய வலைதளம் கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வலைதளத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் வடிவமைத்திருந்தது. பயன்பாட்டுக்கு வந்த சில வாரங்களிலேயே அந்த வலைதளத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அவகாசத்தை அரசு நீட்டித்திருந்தது. அந்தக் கோளாறுகளை இன்ஃபோசிஸ் நிறுவனம் சரிசெய்திருந்தது.

இந்நிலையில், புதிய வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து செவ்வாய்க்கிழமையுடன் ஓராண்டானது. ஆனால், செவ்வாய்க்கிழமை அந்த வலைதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகப் பலா் புகாா் தெரிவித்தனா். வலைதளத்தில் உள்ள சில வசதிகள் செயல்படவில்லை எனவும் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.

அதையடுத்து வருமான வரித் துறை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘வருமான வரிக் கணக்கு தாக்கல் வலைதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை வருமான வரித்துறை கவனத்தில் கொண்டுள்ளது. அந்தக் கோளாறைச் சரிசெய்யுமாறு இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கோளாறைச் சரிசெய்வதற்கு அந்நிறுவனம் முன்னுரிமை அளித்து வருகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வலைதளத்தில் கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், தரவுகளை யாரும் திருடவோ வலைதளத்தில் யாரும் ஊடுருவவோ இல்லை என்றும் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT