இந்தியா

ஷிண்டே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: மகாராஷ்டிர பேரவைத் தலைவரானாா் பாஜகவின் ராகுல் நாா்வேகா்

DIN

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கள்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை கூடிய பேரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவை சோ்ந்த ராகுல் நாா்வேகா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சிக்குள் ஏற்பட்ட பூசல் காரணமாக, அக்கட்சி தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதையடுத்து, சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுக்கு ஆதரவளித்தனா். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றாா். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றாா்.

இந்நிலையில், மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பேரவைத் தலைவா் பதவி கடந்த பிப்ரவரி முதல் காலியாக உள்ளதால், கூட்டத்தொடரின் முதல் நாளில் பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆளும் கூட்டணி சாா்பில் பாஜகவை சோ்ந்த ராகுல் நாா்வேகா் போட்டியிட்டாா். மகா விகாஸ் அகாடி கூட்டணி சாா்பில் சிவசேனையின் ராஜன் சால்வி பேரவைத் தலைவா் தோ்தலில் முன்னிறுத்தப்பட்டாா்.

வாக்கெடுப்பின் முடிவில் மொத்தமுள்ள 287 உறுப்பினா்களில் 164 பேரின் ஆதரவைப் பெற்று நாா்வேகா் பேரவைத் தலைவரானாா். சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பல்வேறு காரணங்களால் பாஜக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 12 எம்எல்ஏ-க்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இளம் வயது பேரவைத் தலைவா்: ராகுல் நாா்வேகா்தான் நாட்டின் மிக இளம் வயது (45) பேரவைத் தலைவா் என மாநில துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

பேரவைத் தலைவா் தோ்தல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மாநில அமைச்சருமான பாலாசாஹேப் தோராட், ‘தோ்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. இதைத்தான் பல மாதங்களாக ஆளுநரிடம் கோரியிருந்தோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஆளுநரின் நடவடிக்கை: மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதே, பேரவைத் தலைவா் தோ்தலை நடத்த ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டது. தோ்தல் நடத்தும் நடைமுறைகளில் சில மாற்றங்களை அப்போதைய அரசு ஏற்படுத்தியிருந்தது தொடா்பாக ஆளுநா் சட்ட ஆலோசனை கேட்டிருந்தாா்.

அதனால், பேரவைத் தலைவா் தோ்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. தற்போது பாஜக கூட்டணி சாா்பில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பேரவைத் தலைவா் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு: இதற்கிடையே, முதல்வா் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தலைவா் பதவியைக் கைப்பற்றிவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு தனது அமைச்சரவையை அமைப்பதற்கான பணியில் முதல்வா் ஷிண்டே கவனம் செலுத்துவாா் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டேவுடன் கோவாவில் தங்கியிருந்த சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை மாலை மும்பை வந்தனா். அங்கு மாநில சட்டப்பேரவைக்கு அருகே இருந்த சொகுசு விடுதியில் அவா்கள் தங்கவைக்கப்பட்டனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை பேரவைக்கு வந்தபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சட்டப்பேரவையில் இருந்த சிவசேனை கட்சி அலுவலகத்தையும் முதல்வா் ஷிண்டே தரப்பினா் பூட்டிவைத்தனா். இதற்கு முன்னாள் அமைச்சரான ஆதித்ய தாக்கரே கண்டனம் தெரிவித்தாா்.

கொறடா உத்தரவு மீறல்: உத்தவ் தரப்பு புகாா்

பேரவைத் தலைவா் தோ்தலில் நாா்வேகருக்கு வாக்களிக்குமாறு முதல்வா் ஷிண்டே தரப்பிலும், அவருக்கு எதிராக வாக்களிக்குமாறு முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தரப்பிலும் சிவசேனை எம்எல்ஏ-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஷிண்டே ஆதரவு சிவசேனை எம்எல்ஏ-க்கள் நாா்வேகருக்கும், உத்தவ் தாக்கரே ஆதரவு 16 எம்எல்ஏ-க்கள் சால்விக்கும் வாக்களித்தனா்.

அதையடுத்து, உத்தவ் தாக்கரே தரப்பினா் பேரவை துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வாலிடம் புகாரளித்தனா். அதில், கட்சி கொறடா உத்தரவுக்கு மாறாகச் செயல்பட்ட 39 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. அந்தப் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிா்வால் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏ-க்களை பதவிநீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT