இந்தியா

தெலங்கானாவில் முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள்: பாஜகவுக்கு சந்திரசேகர ராவ் சவால்!

3rd Jul 2022 05:24 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தைப் போல் தெலங்கானாவிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என கூறும் பாஜகவினர் பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள். நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம் என பாஜகவுக்கு சவால் விடுக்கும் தொணியில் சந்திரசேகரவ் பேசினார்.

பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்காத சம்பவம் அரசியல் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு கேள்விகளை பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் எழுப்பியுள்ளார். முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும் என்று  அவர் சவால் விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஹைதராபாத் வந்தார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்கவில்லை.

ADVERTISEMENT

கடந்த 5 மாதங்களில் பிரதமர் உடனான சந்திப்பை சந்திரசேகர ராவ் தவிர்ப்பது இது மூன்றாவது முறை ஆகும்.  சந்திரசேகர ராவ் செயலுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் நேரில் சென்று வரவேற்காத விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் , புலி வரும் போது நரிகள் ஓடி விடும் என விமர்சித்தார். முதல்வர் சந்திரசேகர ராவ் ஏன் இப்படி செய்கிறார் என்பது பற்றி தங்களுக்கு தெரியவில்லை என்றும், விரைவில் காவி, தாமரைக் கொடி தெலங்கானாவில் ஏற்றப்படும் என்றும் பண்டி சஞ்சய் தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக மற்றும் பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள சந்திரசேகர ராவ், விவசாயிகள் நலனுக்காக கொண்டு வரப்பட்டதாக பாஜக அரசு கூறிய வேளாண் சட்டத்தை, மோடி அரசு திரும்பப் பெற்றது ஏன்?,  விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது விவசாய உற்பத்திக்கான முதலீடு இரு மடங்காக அதிகரித்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியவர், ஹைதராபாத்தில் நடந்து வரும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார்.  

மேலும், "பிரஸ்தாச்சார் முக்த் பாரத் என்ன ஆனது?, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் ஏன் வீழ்ச்சியடைகிறது? ஏன் இந்த நாட்டில் விவசாயிகள் அவமதிக்கப்படுகிறார்கள்?, தேர்தல் வாக்குறுதிகளை உங்கள் அரசாங்கம் ஏன் செயல்படுத்தத் தவறுகிறது?, நீங்கள் குற்றமற்றவர் என்றால், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்திலே பதில் சொல்லுங்கள் என்றவர், பிரதமர் உறுதியளித்தபடி கருப்புப் பணம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதா?, அப்படியானால் அது எங்கே? என்ற கேள்வி எழுப்பிய ராவ், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையிலும் குற்றம் சுமத்திய ராவ், "அமெரிக்க அதிபர் தேர்தல் அகமதாபாத் மாநகராட்சி தேர்தல் போன்றது என்று மோடி நினைத்தார். தோற்கடிக்கப்பட்ட டிரம்ப்பை மோடி ஆதரித்தார், இது இறுதியில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்தது" என்று ராவ் கூறினார். இலங்கையில் மோடி அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக ராவ் கூறினார்.

இந்தியாவிலே தயாரிக்கும் திட்டத்தின் கீழ் எத்தனை வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என சந்திரசேகர ராவ் வலியுறுத்தினார். 

மேலும், மகாராஷ்டிரத்தைப் போல் தெலங்கானாவிலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என ஹைதரபாத்தில் அமர்ந்திருக்கும் பாஜகவினர் கூறுகிறார்கள். 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா பேரவையில் டிஆர்எஸ் கட்சிக்கு 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பரவாயில்லை. எங்கள் அரசை கவிழச் செய்யுங்கள். அதன் பிறகு நான் சுதந்திரமாகி விடுவேன். பின்னர் தில்லியில் (மோடி) ஆட்சியை கவிழ்க்க எங்களால் முடியும். நாங்களும் அதற்காக காத்திருக்கிறோம். முடிந்தால் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டுங்கள் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் குடியரசுத் தலைவரின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட டிஆர்எஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இடி முழக்கமிட்ட ராவ், ஒன்பது மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பாஜக கவிழ்த்துள்ளதாக கூறினார்.

"மோடி ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தையும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும் வெற்றிகரமாகக் கொன்று வருகிறார். 

"மோடி தன்னை பிரம்மா என்றும் நிரந்தரம் என்றும் நினைக்கிறார். மோடி இந்த நாட்டின் 15 ஆவது பிரதமர். ஜனநாயகத்தில் யாரும் நிரந்தரமானவர்கள் இல்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரமானது. நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் மாறியுள்ளனர்" என்று ராவ் நினைவுபடுத்தினார். 

மோடியின் ஆட்சியில் இந்த நாட்டில் எத்தனை வணிகர்கள் பணக்காரர்களாக ஆனார்கள் என்பது குறித்த முழுத் தகவல் தன்னிடம் இருப்பதாகவும், உரிய நேரத்தில் இந்தத் தகவலை வெளியிடுவேன் என்றும் ராவ் கூறினார்.

ராவ் யஷ்வந்த் சின்ஹாவை கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அறிமுகப்படுத்தினார். "சின்ஹா ​​ஒரு உயர்ந்த ஆளுமை" என்று ராவ் கட்சித் தலைவர்களிடம் கூறி சின்ஹாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். நமக்கு ஒரு மாற்றம் தேவை. ஆனால், எந்த விதமான மாற்றம் என்பது முக்கியம். இந்திய அரசியலில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று ராவ் வாழ்த்தினார்.

சின்ஹா ​​நன்றி: டிஆர்எஸ் தலைவர்களிடம் உரையாற்றிய சின்ஹா, குடியரசுத் தலைவர் தேர்தல் இரு தனிநபர்களின் அடையாளங்களுக்கு இடையிலான சண்டை அல்ல, ஆனால், இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை என்று கூறினார்.

சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர் நாட்டுக்கு தேவை என்று சின்ஹா ​​கூறினார். "ராவ் மோடியிடம் பல கேள்விகளை எழுப்பினார். ஆனால், அதற்கு பதில் இல்லாததால் மோடி பதிலளிக்கவில்லை" என்று யஷ்வந்த் சின்ஹா ​​கூறினார்.

எட்டு ஆண்டு கால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பில் பேசியதில்லை என்று சுட்டிக்காட்டிய சின்ஹா,  ஊடகங்களை எதிர்கொள்ள மோடிக்கு தைரியம் இல்லை என்று ​​குற்றம் சாட்டினார். தனது வேட்புமனுவை ஆதரித்த ராவுக்கு நன்றி தெரிவித்தார்.

"நாட்டில் மக்கள் இயக்கம் தொடங்கியது. தெலங்கானா மற்றும் டிஆர்எஸ் இருக்கும் வரை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் இருக்காது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவதோடு எங்கள் போராட்டம் நிற்காது. எதிர்காலத்திலும் இது தொடரும். நாங்கள் கேசிஆர் மற்றும் டிஆர்எஸ் உடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை தொடருவோம்" என்று சின்ஹா ​​கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT