இந்தியா

ராகுல் காந்தி குறித்து போலியான விடியோவை பகிர்ந்த பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

2nd Jul 2022 05:20 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் தொடர்பாக போலியான விடியோவை பகிர்ந்த பாஜக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் உட்பட அந்தக் கட்சியின் தலைவர்கள் பலரும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தாக்கிப் பேசியுள்ளார். தவறான தகவல்களைப் பரப்புவதே பாஜவின் வேலை எனவும் விமர்சித்துள்ளார். 

காங்கிரஸ் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தொடர்பான போலியான விடியோவை பகிர்ந்துள்ளார். அவரது இந்த செயலுக்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க:மோடி எதிர்ப்பில் ‘மணி ஹைஸ்ட்’: கவனம் ஈர்த்த போராட்டக்காரர்கள்

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “பாஜக தலைவர்கள் சிலர் வேண்டுமென்றே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட விடியோவினை ஆர்வமாக பகிர்ந்துள்ளனர். உண்மையில் ராகுல் காந்தி கேரளத்தில் தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்துப் பேசிய அந்த விடியோ உதய்பூர் படுகொலை சம்பவத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டு வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த விடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது என தெரிந்து நீக்கப்பட்டது. 
 

இந்த விவகாரத்தில் மிகவும் வேதனையளிக்க கூடியது என்னவென்றால், உங்களது கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யவர்தன் ரத்தோர், சுப்ராத் பதக் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கமலேஷ் சைனி இந்த விடியோவின் உண்மைத் தன்மை குறித்து சிந்திக்காமல் வேண்டுமென்றே மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
 

இந்த விடியோ போலியானது என காங்கிரஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சர் ரத்தோர் முதலில் விடியோவினை நீக்கி விட்டு பின்னர் மீண்டும் அதே விடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இதிலிருந்து அவர் வேண்டுமென்றே இதனை செய்தார் என்பது உறுதியாகிறது. இந்த செயலின் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பும் உங்களது கட்சியின் நோக்கம் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது. உங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த சித்தரிக்கப்பட்ட விடியோவை நீக்கி விட்ட போதிலும் அவர்கள் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மீது அவதூறு பரப்பிவிட்டனர். நாங்கள் இந்த விடியோவை வெளியிட்டவரின் மீது சட்டப்படியான நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். இனியாவது உங்களது கட்சியும், கட்சியைச் சேர்ந்தவர்களும் இது போன்ற பொய்யானத் தகவல்களை பரப்ப மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இதையும் படிக்க:மக்களை காப்பாற்றிய காங்கிரஸின் திட்டத்தை ஒப்புக்கொள்ள மறுக்கும் பிரதமர்: ராகுல் காந்தி

அதுமட்டுமின்றி, உங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்த தவறுக்கு உடனடியாக அவர்களின் சார்பில் உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும்படி எதிர்பார்க்கிறேன். உங்கள் கட்சியின் சார்பில் இன்று மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உங்கள் கட்சியின் மீதும் மற்றும் தவறாக தகவல்களைப் பகிர்ந்த உங்களது கட்சியினைச் சேர்ந்தவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாஜக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT