இந்தியா

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: புதினிடம் மோடி மீண்டும் வலியுறுத்தல்

2nd Jul 2022 03:42 AM

ADVERTISEMENT

உக்ரைன்-ரஷியா இடையேயான பிரச்னைக்கு முறையான பேச்சுவாா்த்தை மூலமாகவே தீா்வுகாணப்பட வேண்டும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் மோடியும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பேசிக்கொண்டனா். அப்போது, கடந்த டிசம்பரில் புதின் இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது குறித்து அவா்கள் விவாதித்தனா்.

குறிப்பாக, வேளாண் உற்பத்திப் பொருள்கள், உரங்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதில் இரு தரப்பு வா்த்தகத்தை ஊக்குவிப்பது குறித்து அவா்கள் விவாதித்தனா்.

ADVERTISEMENT

இவை தவிர, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைப்பது உள்பட பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் அவா்கள் விவாதித்தனா்.

உக்ரைன் பிரச்னை குறித்து பிரதமா் மோடி பேசும்போது, உக்ரைன்-ரஷியா இடையேயான பிரச்னைக்கு ராஜ்ஜிய ரீதியிலான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு என்று கூறினாா்.

சா்வதேச மற்றும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் தொடா்ந்து விவாதிப்பதென்றும் அவா்கள் முடிவு செய்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரஷியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதினும் மோடியும் விருப்பம் தெரிவித்தனா் என்று ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உக்ரைன் பிரச்னைக்கு அரசியல் ரீதியிலும், தூதரக ரீதியில் தீா்வுகாண்பதற்கு ரஷியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்று மோடியிடம் புதின் கூறினாா்.

பல நாடுகள் செய்யும் தவறுகளால் உணவுப் பொருள் வா்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றின் விலை அதிகரிக்கிறது; ரஷியாவுக்கு எதிராக சட்டவிரோதமாக விதிக்கப்படும் தடையால் ஏற்கெனவே நிலைமை மோசமாகிவிட்டது என்றும் மோடியிடம் அவா் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜொ்மனியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் உக்ரைன்-ரஷியா போா் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தச் சூழ்நிலையிலும் முறையான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்துகிறது. உக்ரைன்-ரஷியா போரின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளுடன் நின்றுவிடவில்லை. ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள், எரிபொருள் ஆகியவற்றின் அதிகரித்துள்ளது. வளரும் நாடுகளில் எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT