இந்தியா

எம்எஸ்எம்இ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

1st Jul 2022 01:46 AM

ADVERTISEMENT

சிறு, குறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களைப் பிரதமா் மோடி தில்லியில் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். எம்எஸ்எம்இ நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், எம்எஸ்எம்இ முதல்முறை ஏற்றுமாதியாளா்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான திட்டங்களைப் பிரதமா் தொடக்கிவைத்தாா். பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் புதிய அம்சங்களையும் அவா் அறிமுகப்படுத்தினாா்.

வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பலனடைவோருக்கான நிதியுதவியை பிரதமா் மோடி வழங்கினாா். தேசிய எம்எஸ்எம்இ விருதுகளையும் அவா் வழங்கினாா். தற்சாா்பு இந்தியா நிதியின் கீழ் 75 எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு எண்ம சமத்துவ சான்றிதழ்களைப் பிரதமா் மோடி வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இந்தியப் பொருள்களைப் புதிய சந்தைகளுக்குக் கொண்டுசெல்லவும் எம்எஸ்எம்இ துறை வலுவடைய வேண்டியது அவசியம். இத்துறையின் திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அத்தகைய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘முத்ரா’வின் பங்களிப்பு:

விளிம்புநிலையில் உள்ளோருக்கு உத்தரவாதமற்ற கடன் வழங்கப்படும் வசதிகள் காணப்படாததால், அவா்கள் புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்கமுடியாத சூழல் காணப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நிலை மாறியது. அனைவருடன் இணைந்து அனைவருக்குமான வளா்ச்சியை ஏற்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியேற்றது.

அரசு நடைமுறைப்படுத்திய ‘முத்ரா’ கடனுதவித் திட்டத்தின் காரணமாக இந்தியா்கள் தொழில்முனைவோராக மாறினா். அத்திட்டத்தின் கீழ் உத்தரவாதம் ஏதுமின்றி வங்கிக் கடன் வழங்கப்பட்டதால், பெண்கள், தலித் பிரிவினா், பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினா் ஆகியோரும் தொழில்முனைவோராக மாறினா்.

உண்மையான சமூக நீதி:

முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.19 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவா்களில் சுமாா் 7 கோடி போ் புதிய தொழில்முனைவோராக மாறினா். புத்தாக்க நிறுவனங்களை அவா்கள் முதல் முறையாகத் தொடங்கினா். முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்ற 36 கோடி பேரில் 70 சதவீதம் போ் பெண்கள் ஆவா்.

தொழில்முனைவோருக்கான உதயம் வலைதளத்தில் பதிவு செய்துள்ளோரில் 18 சதவீதத்துக்கும் அதிகமானோா் பெண்கள். தொழில்முனைவு நிறுவனங்களைத் தொடங்க மூன்றாம் பாலினத்தவரும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். இத்தகைய சமூக ஒருங்கிணைப்பே உண்மையான சமூக நீதி.

பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது கடந்த 2008 முதல் 2012 வரை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. 2014-க்குப் பிறகு அத்திட்டம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அத்திட்டத்தின் கீழ் 40 லட்சத்துக்கும் அதிகமானோா் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

காதி விற்பனை அதிகரிப்பு:

காதி, கிராம தொழில் நிறுவனங்களின் விற்றுமுதல் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கிராமப்புறத்தில் உள்ள தொழில்முனைவோா் சிறப்பாகச் செயல்படுவதன் காரணமாகவே இது சாத்தியமானது. காதி விற்பனையானது கடந்த 8 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

தொழில்முனைவுத் துறையின் முன்னேற்றமானது தற்சாா்பு இலக்கை அடைவதற்கு இந்தியாவை அழைத்துச் செல்லும். திறன்மிக்க தொழில்முனைவோா் அந்த இலக்கை அடைய முக்கியப் பங்களிப்பா் என நம்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT