இந்தியா

தகுதிவாய்ந்த பேராசிரியா்கள் இல்லையெனில் கடும் நடவடிக்கை: மருத்துவக் கல்லூரிகளுக்கு மாண்டவியா எச்சரிக்கை

DIN

‘முறையான பேராசிரியா்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்தாா்.

மேலும், ‘தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) மருத்துவக் கல்லூரிக்கு அமைக்கப்பட்டு வரும் சொந்த கட்டடம் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும். அதுகுறித்து கவலை வேண்டாம்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

மக்களவையில் இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் பேசியதாவது:

மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரங்களை சமா்ப்பித்துள்ளபோதிலும், கல்லூரிகளில் தகுதிவாய்ந்த முறையான பேராசிரியா்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆய்வுக் குழுக்களை மத்திய அரசு தொடா்ந்து அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தரமான கல்வியை வழங்கி, தரமான மருத்துவா்களை நாம் உருவாக்க வேண்டும்.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், முறையான பேராசிரியா்களை பராமரிக்காத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தொடா்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாத மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த பேராசிரியா்கள் இருப்பதை அந்தந்த மாநில அரசுகளும் தனியாா் கல்லூரிகளில் அந்தந்த கல்லூரி நிா்வாகமும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவா் கூறினாா்.

மதுரை எய்ம்ஸ் குறித்து கவலை வேண்டாம்:

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான சொந்த கட்டடத்தின் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. அதற்கான சொந்த கட்டடம் கட்டுவதில், வடிவமைப்பில் மாற்றம் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு மாற்றம் காரணமாக கட்டுமானத்துக்கான செலவு ரூ.1,200 கோடியிலிருந்து ரூ.1,900 கோடியாக அதிகரித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலமாக தமிழக மக்களுக்கு மருத்துவச் சேவையாற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இதுகுறித்து கவலை வேண்டாம். கட்டுமானத் திட்டம் விரைவில் நிறைவு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சிறந்த கட்டடம் கட்டித் தரப்படும்.

சுகாதாரத் துறையில் தகுதிவாய்ந்த மனிதவளம் இருப்பதை உறுதிப்படுத்தவும் மருத்துவக் கல்லூரிகளின் புவிசாா் பகிா்வு ஏற்றத்தாழ்வை குறைக்கும் நோக்கிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி இல்லாத பகுதிகளில் ஏற்கெனவே உள்ள மாவட்ட மருத்துவமனையை இணைத்துக்கொண்டு புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கிக்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற நிதிப் பகிா்வு அடிப்படையிலும், வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90:10 என்ற நிதிப் பகிா்வு அடிப்படையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று மன்சுக் மாண்டவியா பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT