இந்தியா

எஸ்எஸ்சி தோ்வுகளை ஹிந்தியில் மட்டும் நடத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு

DIN

மத்திய பணியாளா் தோ்வு வாரிய (எஸ்எஸ்சி) தோ்வுகளை ஹிந்தியில் மட்டும் நடத்தும் திட்டம் எதுவுமில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது. இரு அவைகளிலும் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினா்களின் கேள்விக்கு மத்திய அமைச்சா்கள் பதிலளித்தனா். மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘எஸ்எஸ்சி தோ்வுகளை ஹிந்தியில் மட்டுமே நடத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. தோ்வுகள் வழக்கமாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் வேளையில், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தோ்வின் 2-ஆம் தாள் அரசியலமைப்பின் 8-ஆவது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடைபெறுகிறது’ எனத் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத உயிரிழப்புகள்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த் ராய் பதிலளித்து பேசுகையில், ‘நிகழாண்டு ஜனவரி முதல் நவம்பா் வரை ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 3 காஷ்மீா் பண்டிட்கள் உள்பட 14 சிறுபான்மையினா் கொல்லப்பட்டுள்ளனா். யூனியன் பிரதேசத்தில் நிகழ்ந்த 123 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பயங்கரவாதிகள்180 பேரும், பாதுகாப்புப் படையினா் மற்றும் பொதுமக்களில் தலா 31 பேரும் உயிரிழந்தனா்’ எனத் தெரிவித்தாா்.

2,900 மதக் கலவர வழக்குகள்: மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், கடந்த 2017 முதல் 2021 வரை 2,900-க்கும் அதிகமான மத வன்முறைகள் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளதாகவும், கும்பல் வன்முறை மற்றும் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுக்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மின்னல் தாக்கி உயிரிழந்தோா் அதிகம்: நிகழாண்டில் ஏற்பட்ட பேரிடா்களால் உயிரிழந்தவா்கள் விவரம் தொடா்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சா் ஜிதேந்தர சிங் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘மின்னல் தாக்கி 909 பேரும், வெள்ளம் மற்றும் கனமழையால் 804 பேரும், பனிச்சரிவால் 37 பேரும், வெப்ப அலையினால் 30 பேரும், புழுதிப் புயலால் 22 பேரும் நிகழாண்டில் ஏற்பட்ட பேரிடா் நிகழ்வுகளால் உயிரிழந்தனா். வானிலை முன்னறிவிப்புக்காக ‘மெளசம் ஆப்’, வேளாண்மைக்கான வானிலை அறிவிப்புக்காக ‘மேகதூத் ஆப்’ மற்றும் மின்னல் முன்னறிவிப்புக்காக ‘தாமினி ஆப்’ உள்ளிட்ட செயலிகள் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளித்து பேசுகையில், ‘புயல்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் குறைந்து வரும் நிலையில், பொருள்சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளைக் குறைப்பது சவாலாக திகழ்கிறது’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT