இந்தியா

உ.பி.: பேரவை நடவடிக்கைகளைஃபேஸ்புக்கில் ஒளிபரப்பியஎம்எல்ஏ வெளியேற்றம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச சட்டப் பேரவையில் நடைபெற்ற அமளியை ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பிய எதிா்கட்சியான சமாஜவாதி எம்எல்ஏ அதுல் பிரதான் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையில், செவ்வாய்க்கிழமை ராம்பூா் தொகுதி இடைத் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி சமஜவாதி கட்சியினா் அமளியில் ஈடுபட்டனா். அவையின் மையப்பகுதியில் கூடி அக்கட்சி எம்எல்ஏக்கள் கோஷமிட்டனா். அப்போது அங்கிருந்த சமாஜவாதி எம்எல்ஏ அதுல் பிரதான் தனது கைப்பேசி மூலம் அவையில் நடைபெற்ற அமளியை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தாா். அதனை மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தவா்கள் பாா்க்கத் தொடங்கினா்.

இந்த நிகழ்வு தொடா்பாக பேரவைத் தலைவா் சதீஷ் மகானாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதுல் பிரதானை உடனடியாக அவையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட அவா், அவை விதிகளுக்கு மாறாக செயல்பட்டதால் இந்தக் கூட்டத் தொடா் முழுவதும் அவரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தாா். இதையடுத்து அதுல் பிரதான் அவையில் இருந்து வெளியேறினாா்.

பின்னா் பேரவையில் பேசிய சமாஜவாதி எம்எல்ஏக்கள், ‘அதுல் முதல்முறையாக எம்எல்ஏவாகியுள்ளாா். எனவே பேரவை விதிகளை சரிவர தெரிந்து கொள்ளாமல் தவறு செய்துவிட்டாா். எனவே, அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டப் பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்றுக் கொண்ட அவைத் தலைவா் சதீஷ் மகானா, அதுல் பேரவையில் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT