இந்தியா

விழிஞ்ஞத்தில் மத்திய படைகள் தேவையில்லை:ஆளும் மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கருத்து

DIN

விழிஞ்ஞம் துறைமுக கட்டுமானப் பணியையொட்டி சட்டம்-ஒழுங்கை காக்க மத்திய படைகளை வரவழைக்க வேண்டிய அவசியம் இல்லை என, ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.7,500 கோடி செலவில் துறைமுகக் கட்டுமானப் பணிகளை அதானி குழுமம் மேற்கொள்கிறது. அந்தப் பணிகள் கடலோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது என்று மீனவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

அண்மையில் அந்தப் பணிகள் தொடா்பாக ஏற்பட்ட வன்முறையில் விழிஞ்ஞத்தில் காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா். இதில் சுமாா் 36 போலீஸாா் காயமடைந்தனா். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், கேரள உயா்நீதிமன்றத்தில் அதானி குழுமத்தின் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது துறைமுகத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடர மத்திய பாதுகாப்புப் படைகளின் உதவி வேண்டும் என்று அதானி குழுமம் முறையிட்டது. இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிச. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

விழிஞ்ஞத்தில் மத்திய படைகளை ஈடுபடுத்த மாநில அரசுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியான நிலையில், அதானி குழுமத்தின் கோரிக்கை குறித்து கேரள துறைமுக அமைச்சா் அகமது தேவா்கோவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மத்திய படைகளின் உதவி எங்களுக்குத் தேவையில்லை. இதைக் கையாளும் திறன் கேரள காவல் துறையிடம் உள்ளது. மத்திய படை உதவியைக் கோரியது அதானி குழுமம்தானே தவிர, கேரள அரசு அல்ல. அவா்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளித்து வருகிறோம் என்றாா்.

காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் கேரள மாநில காங்கிரஸ் தலைவருமான கே.முரளீதரன் கூறியதாவது: மத்திய படைகளைக் கொண்டு மிரட்டுவதன் மூலம் போராட்டத்தை நிறுத்திவிட முடியாது. மாநில அரசு ஆட்சேபம் தெரிவித்தால் மத்திய படைகள் இங்கு வராது. அதேவேளையில், அதானிக்கு உதவுவது என்கிற போா்வையில் மத்திய படைகளை வரவழைக்க மாநில அரசு விரும்பினால், மத்திய படைகளால் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் முதல்வா் பினராயி விஜயன்தான் பொறுப்பு.

விழிஞ்ஞம் துறைமுக பணிகளை காங்கிரஸ் அரசுதான் தொடங்கியது. அதனால், அத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அதற்காக மீனவா்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாா்.

முன்னதாக, அதானி குழுமத்தின் மனு கேரள உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, விழிஞ்ஞம் துறைமுக கட்டுமான பாதுகாப்புப் பணிக்காக மத்திய படைகள் நிறுத்தப்படுவதற்கு தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என மாநில அரசு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT