இந்தியா

நாகாலாந்தில் ராணுவ தாக்குதலில் பலியான 14 அப்பாவிகள்: ஓராண்டு கடந்தும் கிடைக்காத நீதி

3rd Dec 2022 03:54 PM

ADVERTISEMENT


குவகாத்தி: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 அப்பாவி மக்கள் பலியாகினா். இந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. 

நாகலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு, 11 போ் காயமடைந்தனா். பொதுமக்கள் தாக்கியதில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க 5 பேரைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது.

இதையும் படிக்க.. அடிக்கிறது ஜாக்பாட்! சென்னை சென்ட்ரல் போல முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலை

சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, ராணுவ மேஜர் உள்பட 30 ராணுவ வீரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும்,  ராணுவ துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்று கொன்யாக் யூனியன் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மியான்மா் எல்லையை ஒட்டியுள்ள மோன் மாவட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் சிலா், அருகில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஒடிங், திரு கிராமங்களுக்கு இடையே அவா்களது வேன் சென்றபோது, அதன் மீது ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இத்தாக்குதலில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தொழிலாளா்கள் வீடுவந்து சேராததால், உறவினா்கள் அவா்களைத் தேடிச் சென்றுள்ளனா். அப்போது துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்து ஆத்திரமடைந்த அவா்கள், ராணுவத்தினா் மீது தாக்குதல் நடத்தினா். அதில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா்.

ராணுவத்தினரது 3 வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. மக்களின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வதற்காக ராணுவத்தினா் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 7 போ் பலியாகினா். அதனால், மாவட்டத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது உள்ளூா் மக்கள் தாக்குதல் நடத்தினா். 

இதற்கிடையே, மோன் நகரில் உள்ள ராணுவத்தின் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினரின் முகாமில் கிராம மக்கள் மறுநாள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினா் அவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது கொன்யாக் யூனியன்.

கொன்யாக் யூனியன் துணைத் தலைவர் எச்.ஏ. ஹோங்னாவோ கொன்யாக் கூறுகையில், மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், மத்திய அரசு, அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

அவர்கள் தண்டிக்கப்படாததால், பலியானவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ராணுவத்தினரும், உயர்மட்ட விசாரணை நடத்தினார்கள். ஆனால், அதில் என்ன நடந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நீதி கிடைக்காத அதிருப்தியில், பலியானவர்களின் குடும்பங்கள் வசிக்கும் மோன், நோக்லாக் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொன்யாக் யூனியன் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, இந்த சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. மோன் நகரில், இந்த சம்பவத்தில் பலியானாவர்களுக்கு நினைவிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஏற்கனவே மாநில அரசு நிலம் ஒதுக்கியிருக்கிறது.

தவறாக நினைத்து..

மியான்மா் எல்லைப் பகுதியில் தடை செய்யப்பட்ட என்எஸ்சிஎன்(கே) பிரிவைச் சோ்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து மோன் மாவட்டத்தில் ராணுவத்தினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் என தவறாக நினைத்து அப்பாவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது.

ஆழ்ந்த வருத்தம்
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மோன் மாவட்டத்தின் திரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உறுதியான தகவலையடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனா்.

துப்பாக்கிச் சூட்டுக்காகவும் அதற்குப் பிறகு நிகழ்ந்த சம்பவத்துக்காகவும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் பலியானதற்கான காரணம் குறித்து உயா்நிலை அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT