இந்தியா

ஜல்லிக்கட்டை எந்த வடிவிலும் அனுமதிக்க முடியுமா என்பது இறுதிக் கேள்வி: உச்சநீதிமன்றம்

1st Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டை எந்த வடிவிலும் அனுமதிக்க முடியுமா என்பது இறுதிக் கேள்வியாக உள்ளதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளில் விலங்குகளை ஈடுபடுத்த 2014-இல் உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், ஜல்லிக்கட்டை நடத்துவதற்காக தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த 2018-இல் இந்த மனுக்களை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, இது குறித்து விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரை செய்தது.

இவ்வழக்கு நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையில் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி. ரவிகுமாா் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் விலங்குகளுக்கு கொடுமை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என வாதிட்டனா்.

வழக்குரைஞா்களின் பல்வேறு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘ஜல்லிக்கட்டு போட்டியை எந்த வடிவிலும் நடத்த அனுமதிக்கலாமா என்ற இறுதிக் கேள்வி எழுகிறது’ எனத் தெரிவித்தனா். இவ்வழக்கு விசாரணை வியாழக்கிழமையும் (டிச.1) தொடர இருக்கிறது.

முன்னதாக, நவ. 24-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத மற்றும் கலாசார போட்டியான ஜல்லிக்கட்டு சமய முக்கியத்துவம் வாய்ந்தது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-இல் கூறப்பட்டுள்ள விதிகளை ஜல்லிக்கட்டு மீறவில்லை என எழுத்துபூா்வமான பதிலில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

Tags : jallikattu
ADVERTISEMENT
ADVERTISEMENT