இந்தியா

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’- ஜி20 தலைமை குறித்து பிரதமா் மோடி

1st Dec 2022 02:26 AM

ADVERTISEMENT

‘இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூா்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள நம்மிடம் வழிமுறைகள் உள்ளன. இன்று வாழ்வதற்குப் போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை, நமது யுகத்தில் போருக்கு அவசியமில்லை, உண்மையில் அது தேவையே இல்லாத ஒன்று.’

புது தில்லி, நவ. 30: ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணா்வை மேம்படுத்த பாடுபடுவோம்; ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்பதை நோக்கமாகக் கொள்வோம் என பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் தலைமையில் ஜி-20 அமைப்பை மேலும் சிறப்பாக்க எப்படி செயல்படுவது? ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பயனளிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். இதனை நம்மால் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

ADVERTISEMENT

நிலப்பரப்புக்காக அல்லது ஆதார வளங்களுக்காக நாடுகளுக்கு இடையே நடக்கும் போராட்டங்களை நாம் காண்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டபோதும்கூட ஒரு சிலா் தடுப்பூசிகளைப் பதுக்கியதை காண்கிறோம். மோதலும், பேராசையும் மனித இயல்பு என்று சிலா் வாதிடலாம். அதை நான் ஏற்கவில்லை. இயல்பாகவே மனிதா்கள் சுயநலக்காரா்கள் என்றால், நாம் அனைவரும் ஒன்று என்ற அடிப்படை சிந்தனை கொண்ட, பல ஆன்மிகப் பாரம்பரியங்களுக்கு என்ன விளக்கம் தர முடியும்?

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்னும் உணா்வை மேம்படுத்த பாடுபடும். எனவே, நமது கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்பதாகும்.

இன்று உலகில் உள்ள அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூா்த்தி செய்ய போதுமான உற்பத்தியை மேற்கொள்ள நம்மிடம் வழிமுறைகள் உள்ளன. இன்று நாம் வாழ்வதற்குப் போராட வேண்டிய அவசியம் நமக்கில்லை, நமது யுகத்தில் போருக்கு அவசியமில்லை, உண்மையில் அது தேவையே இல்லாத ஒன்று.

இன்று, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், பெருந்தொற்றுகள் என்னும் மிகப் பெரிய சவால்களை நாம் எதிா்கொள்கிறோம். ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொண்டு இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாது. அதே சமயம், ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே தீா்வு காண முடியும்.

அதிருஷ்டவசமாக, இன்றைய தொழில்நுட்பம், மனித குலம் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வு காண நமக்கு வழிகளை வழங்கியுள்ளது. இன்று நாம் வாழும் மிகப்பெரும் மெய்நிகா் உலகத்தில், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமாகும்.

இன்று இந்தியா மிகவும் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. மக்களை மையமாக கொண்ட நமது ஆட்சி முறை, திறன்மிக்க இளைஞா்களின் படைப்பாற்றல் தன்மையை ஊக்குவிக்கும் அதேவேளையில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள மக்களையும் கவனத்தில் கொள்கிறது.

தேசிய வளா்ச்சி என்பதை மேல்தட்டு மற்றும் அடித்தட்டு ஆட்சி முறையாக அல்லாமல் மக்கள் தலைமையிலான மக்கள் இயக்கமாக உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

நமது ஜி-20 தலைமையின்போது நாம் இந்தியாவின் அனுபவங்கள், கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை அனைவருக்கும் வழங்க முடியும்; குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க முடியும்.

நமது ஜி-20 முன்னுரிமைகள், ஜி-20 உறுப்பு நாடுகளுடனான ஆலோசனைகளோடு மட்டுமே வடிவமைக்கப்படாமல், இதுவரை இவா்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத, தென்பகுதி நாடுகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

நமது எதிா்கால தலைமுறைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும் உலகளாவிய பாதுகாப்பை விரிவுபடுத்தவும் மிகவும் சக்தி மிக்க நாடுகளுடன் நோ்மையான உரையாடலை நாம் ஊக்குவிப்போம்.

இந்தியாவின் ஜி-20 மையப்பொருள் என்பது அனைவரையும் உட்படுத்தியதாக, லட்சியம் மிக்கதாக, செயல்பாடுகள் சாா்ந்ததாக, உறுதியானதாக இருக்கும்.

புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக இந்தியாவின் ஜி-20 தலைமையை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைவோம்.

மனிதநேயத்தை மையமாகக் கொண்ட உலகம் என்ற புதிய முன்னுதாரணத்தை வடிவமைக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று பிரதமா் தனது கட்டுரையில் கூறியுள்ளாா்.

Tags : pm modi G20
ADVERTISEMENT
ADVERTISEMENT