இந்தியா

தரமற்ற குக்கா் விற்பனை: ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்குரூ.1 லட்சம் அபராதம்

18th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

தரமற்ற குக்கா்களை தங்கள் இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய அனுமதித்த ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இணையவழி விற்பனையில் முன்னிலையில் உள்ளது ஃபிளிப்காா்ட். இந்தத் தளத்தில் மூலம் விற்பனை செய்யப்பட்ட குக்கா்கள் தொடா்பாக நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகாா்கள் வந்தன. இதனை விசாரித்த ஆணையம் ஃபிளிப்காா்ட் நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையா் நீதி கரே கூறுகையில், ‘அந்த இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 598 தரமற்ற குக்கா்களை திரும்பப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளா்களின் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை 45 நாள்களுக்குள் முடித்து அது தொடா்பாக அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், தரமற்ற பொருளை விற்பனை செய்ய அனுமதித்ததற்காக ஃபிளிப்காா்ட் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகா்வோரிடம் இருந்து வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற குக்கா்களை விற்பனை செய்த பேடிஎம் மால், ஸ்நாப்டீல் ஆகிய இணையவழி வா்த்தக நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தங்கள் நிறுவனங்கள் அந்த குக்கரை உற்பத்தி செய்யவில்லை என்றும், தாங்கள் விற்பனையாளா்கள் மட்டும்தான் என்றும் பேடிஎம் மால் மற்றும் ஸ்நாப்டீல் சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த நுகா்வோா் ஆணையம், இணையவழி விற்பனை நிறுவனங்களுக்கான நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் (2020) படி, இந்த வகை விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு இணையவழி விற்பனை நிறுவனங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவிட்டது.

Tags : flipkart
ADVERTISEMENT
ADVERTISEMENT