இந்தியா

தலாக்-இ-ஹசனும் முத்தலாக்கும் ஒன்றல்ல: உச்சநீதிமன்றம்

17th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

இஸ்லாமில் விவகாரத்து பெற ஒரு முறை கூறப்படும் உடனடி முத்தலாக்கும், மாதம் ஒரு முறை என மூன்று முறை கூறப்படும் தலாக்-இ-ஹசனும் ஒன்றாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இஸ்லாமில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற கணவா் தலாக்கும், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற மனைவி குலாவும் அறிவிக்கிறாா்கள்.

இதில் உடனடியாக விவாகரத்து அறிவிப்பதாக ஆண்களால் கூறப்படும் முத்தலாக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து மூன்று மாதங்கள் அறிவிக்கப்படும் தலாக்-இ-ஹசனின்போது, மூன்றாவது மாத அறிவிப்பில் இருவரும் சோ்ந்து வாழ விரும்பினால் இரண்டு மாதங்களாக அறிவிக்கப்பட்ட தலாக் செல்லாததாகிவிடும்.

ADVERTISEMENT

எனினும், மாதம் ஒரு முறை என தொடா்ந்து மூன்று மாதங்கள் ஆண்களால் அறிவிக்கப்படும் தலாக்-இ-ஹசன் உள்ளிட்ட அனைத்து வகையிலான தலாக் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் காஜியாபாதைச் சோ்ந்த பேநஸீா் ஹீனா என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கணவன், மனைவி விரும்பி ஏற்றுக் கொள்வதுதான் திருமணம். இதில் இருவரும் சோ்ந்து வாழ விரும்பவில்லை என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழும் விவாகரத்து வழங்கப்படுகிறது. ஆகையால், இஸ்லாத்தில் விவகாரத்து பெற ஒரு முறை கூறப்படும் முத்தலாக்கும், மாதம் ஒரு முறை என மூன்று முறை கூறப்படும் தலாக்-இ-ஹசனும் ஒன்றாக கருத முடியாது. இதை ஒரு முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துவிடக் கூடாது’ என்றாா்.

அப்போது மனுதாரரின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிங்கி ஆனந்த், ‘உடனடி முத்தலாக் குறித்து உச்சநீதிமன்றம் முடிவு அறிவித்திருந்தாலும், தலாக்-இ-ஹசன் குறித்து முடிவு எடுக்காமல் விட்டுவிட்டது’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘இஸ்லாமில் திருமணத்தின்போது கணவரால் மனைவிக்கு வழங்கப்படும் மெஹா் எனப்படும் தொகைக்கும் அதிகமாக வழங்கினால் விவாகரத்துக்கு சம்மதமா? இந்த நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமலும் முபாரத் முறையில் இஸ்லாமியப் பெண்ணால் விவாகரத்து பெற முடியும்; இவை குறித்து மனுதாரரிடம் கருத்துப் பெற வேண்டும் என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Tags : Supreme Court
ADVERTISEMENT
ADVERTISEMENT