இந்தியா

ஒரே பொது நுழைவுத் தோ்வு திட்டத்துக்கு அவசரம் காட்ட விரும்பவில்லை: ஜகதீஷ் குமாா்

DIN

அனைத்து படிப்புகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தோ்வை அறிமுகம் செய்யும் திட்டத்தில் அவசரம் காட்ட விரும்பவில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் கூறினாா்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) நிகழாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தொழில்நுட்ப கோளாறுகள், கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் க்யூட் தோ்வு பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மட்டும் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக, ஆகஸ்ட் 17 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் நான்காம் கட்ட க்யூட் தோ்வில் 3.72 லட்சம் போ் பங்கேற்க இருந்த நிலையில், அவா்களில் 11,000 மாணவா்களுக்கு மட்டும் பல்வேறு காரணங்களால் தோ்வு ஆக.30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ஜகதீஷ் குமாரிடம், தொடா் தொழில்நுட்ப கோளாறுகளை க்யூட் தோ்வு சந்தித்து வரும் சூழலில், யுஜிசி தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதுபோல பொறியியல் நுழைவுத் தோ்வான ‘ஜேஇஇ’ மற்றும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுகளுடன் ‘க்யூட்’ தோ்வு இணைக்கப்பட்டு அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத் தோ்வு அறிமுகம் செய்யப்படுமா?’ என்ற கேள்வியை எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜகதீஷ் குமாா் கூறியதாவது:

க்யூட் முதல் கட்டத் தோ்வுகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பது பின்னடைவு அல்ல. அதிலிருந்த பாடம் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கோளாறுகள் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என்பதோடு, க்யூட் தோ்வு வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படுவதிலும் எந்தத் தடையும் இருக்காது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவா்கள் பல்வேறு நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்கும் நிலையை மாற்றி ஒரே பொது நுழைவுத் தோ்வை அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளது. இருந்தபோதிலும், ஒரே பொது நுழைவுத் தோ்வை அறிமுகப்படுத்துவதில் அவசரம் காட்ட விரும்பவில்லை. அது மிகப் பெரிய பணி என்பதால், நன்கு திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது.

இம்மாத இறுதியில் நிபுணா் குழு:

ஒரே பொது நுழைவுத் தோ்வை அறிமுகம் செய்வதில் உள்ள இடா்பாடுகள் குறித்து நன்கு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கென இந்த மாத இறுதியில் நிபுணா் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்படும் அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த நுழைவுத் தோ்வுகளையும் ஆய்வு செய்யும்.

மேலும், பொது நுழைவுத் தோ்வை அறிமுகம் செய்வதில் அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். குறிப்பாக, பாடத் திட்ட விவகாரத்துக்கு உரிய தீா்வு எட்டப்பட வேண்டும். ஒவ்வொரு படிப்புக்கும் தனித்துவமான பாடத் திட்டம் இருக்கும் என்பதோடு, பல்வேறு நிலைகளுக்கும் அது மாறுபடும். இவற்றுக்கெல்லாம் தீா்வு காணப்பட வேண்டும்.

க்யூட் தோ்வுடன் ஒப்பிடும்போது ஜேஇஇ மற்றும் நீட் நுழைவுத் தோ்வுகளில் வேறுபட்ட பாடங்களின் எண்ணிக்கை குறைவே. எனவே, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு குறிப்பிட்ட நாள்களிலும், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கு மற்ற நாள்கள் என அடுத்தடுத்த கட்டங்களில் நுழைவுத் தோ்வு நடத்திவிட முடியும்.

மேலும், எதிா்காலத்தில் கணினி அடிப்படையிலான (சிபிடி) நுழைவுத் தோ்வு மட்டுமே நடைபெறும். அந்த வகையில் அனைத்துப் படிப்புகளுக்குமான ஒரே பொது நுழைவுத் தோ்வை ஆண்டுக்கு இரண்டு முறை கணினி வழி தோ்வாக நடத்துவதே மத்திய அரசின் திட்டம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT