இந்தியா

என்ன சொல்வதென்று தெரியவில்லை: பில்கிஸ் பானுவின் கணவர் கருத்து

16th Aug 2022 12:37 PM

ADVERTISEMENT


ஆமதாபாத்: 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை என பில்கிஸ் பானுவின் கணவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க.. பீட்சா மாவு மீது இவையெல்லாமா? முகம் சுளிக்க வைக்கும் டோமினோஸ்

பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரது குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டது குறித்து ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், தானும், எனது மனைவி மற்றும் 5 மகன்களும், பெரிய மகனுக்கு 20 வயதாகிறது, இதுவரை ஒரு நிரந்தர முகவரி இல்லாமல், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இவர்களது விடுதலை தொடர்பான மனு எப்போது தொடரப்பட்டது என்பது குறித்தோ, முடிவு எப்போது எட்டப்பட்டது என்பது குறித்தோ எங்களுக்கு எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து எந்த நோட்டீஸும் எங்களுக்கு வரவில்லை. இது பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள எங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இது குறித்து தற்போது என்ன சொல்வது என்று கூடத் தெரியவில்லை. முழுமையான விவரங்கள் கிடைக்கப்பெற்ற பிறகுதான் என்னால் இது பற்றி சொல்ல முடியும்.

எங்களுடைய அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், குடும்பத்தினர் என இந்தக் கலவரத்தில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். குஜராத் அரசு எங்களுக்கு 50 லட்சம் இழப்பீடு அளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி வீடு மற்றும் அரசு வேலை இதுவரை வழங்கவில்லை என்றும் ரசூல் கூறுகிறார்.

என்ன நடந்தது?
குஜராத் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறைச்சாலையிலிருந்து திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

குற்றவாளிகள் 11 பேரும் 15 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைக் காரணம் காட்டி குற்றவாளிகளில் ஒருவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதன் மீது முடிவெடுக்க குஜராத் அரசைக் கேட்டுக் கொண்டது.

குஜராத் அரசு இது குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை அமைத்தது. பஞ்சமஹால்ஸ் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டக் குழுவினர், குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து பரிந்துரை செய்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு குஜராத் அரசு சிறைச்சாலைக்கு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில், 11 பேரும் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பில்கிஸ் பானு வழக்கு
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மிகப்பெரிய கலவரம் மூண்டது. அப்போது ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு முதலில் ஆமதாபாதில் நடைபெற்றது. பின்னர் பானுவின் ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்டு, மும்பைக்கு விசாரணை மாற்றப்பட்டது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வழக்கு மீது விசாரணை நடத்தி, போலீஸார் உள்பட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 போலீஸார், 2 மருத்துவர்கள் ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 6 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. 6 பேரின் மேல்முறையீடு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்க குஜராத் அரசு முன்வந்தது. இதை நிராகரித்து விட்ட பானு, உச்சநீதிமன்றத்தில் தனக்கு அதிகப்பட்சமாக ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பில்கிஸ் பானு வசிக்க வீடு இன்றி மிகவும் இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருவது நீதிபதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் அவர் விரும்பும் பகுதியில் வீடு ஆகியவற்றை 2 வாரங்களுக்குள் அளிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 11 பேரும் நேற்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT