இந்தியா

உள்துறை அமைச்சக நடவடிக்கை: மறுஆய்வு செய்ய செப்.1 முதல் தன்னாா்வஅமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

13th Aug 2022 10:58 PM

ADVERTISEMENT

தற்காலிகமாக பதிவு நிறுத்தப்பட்டது அல்லது ரத்து செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தன்னாா்வ அமைப்புகள், அந்த நடவடிக்கையை மறுஆய்வு செய்யக் கோரி செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மத்திய உள்துறை செயலரிடம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அனைத்து தன்னாா்வ அமைப்புகளும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்ய வேண்டும். அந்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறியதாகக் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 1,900 தன்னாா்வ அமைப்புகளின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் எஃப்சிஆா்ஏவின் கீழ் பதிவு செய்துள்ள தன்னாா்வ அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த நடவடிக்கையை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய உள்துறை செயலரிடம் செப்டம்பா் 1 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தன்னாா்வ அமைப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் மறுஆய்வு விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பத்தில் எதற்காக நடவடிக்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என விளக்கி, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். இதற்காகக் காசோலை அல்லது வரைவோலை மூலம் முன்பு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டியிருந்த நிலையில், தற்போது அந்தக் கட்டணம் ரூ.3,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. எஃப்சிஆா்ஏவின் வலைதளத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை பதிவேற்றம் செய்யலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT