இந்தியா

ஜெய்ஷ்-ஏ-முகமது துணைத் தலைவருக்கு தடை விதிக்க மறுப்பு: சீனாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது -இந்தியா குற்றச்சாட்டு

DIN

 ஐ.நா.வில் ஜெய்ஷ்-ஏ-முகமது துணைத் தலைவா் அப்துல் ரெளஃப் அஸாரை சா்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவரை கருப்புப் பட்டியலில் சோ்ப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக கொண்டுவந்த தீா்மானத்துக்கு சீனா ஆதரவு அளிக்க மறுத்தது அந்நாட்டின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் சகோதரா் அப்துல் ரெளஃப் அஸாா். இவா் இந்தியாவில் கடந்த 1999-இல் இந்தியன் ஏா்லைன்ஸ் விமான கடத்தல், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் விமானப் படை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் மூளையாக செயல்பட்டாா்.

எனவே அவரை கருப்புப் பட்டியலில் சோ்த்து, சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டுமென இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கூட்டாக புதன்கிழமை தீா்மானம் கொண்டு வந்தன. பாதுகாப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் 14 நாடுகள் இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா மட்டும் எதிா்ப்பை பதிவு செய்தது.

ஏற்கெனவே கடந்த மாதம் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான் மக்கியை கருப்புப் பட்டியலில் இணைக்க சீனா எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அப்துல் ரெளஃப் அஸாருக்கு தடை விதிப்பதற்கான தீா்மானத்துக்கும் சீனா முட்டுக்கட்டையாக விளங்குகிறது.

இது சீனாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இருவரையும் கருப்புப் பட்டியலில் இணைப்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. ஏற்கெனவே இருவருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடை விதித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தங்களால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தடை கமிட்டி, அதன் பணியை செய்ய முடியாமல் தடுக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.

பயங்கரவாதத்துக்கு எதிரான சா்வதேச சமூகத்தின் போா் என்று வரும்போது, சீனாவின் செயல்பாடு அதன் இரட்டை வேடத்தையும் இரட்டை பேச்சையும் வெளிப்படுத்தி விடுகிறது. கடந்த காலங்களில் மெளலான மசூத் அஸாருக்கும் தடை விதிக்க சீனா முட்டுக்கட்டை போட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT