இந்தியா

பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் செயலை நிறுத்த வேண்டும்: ராகுல்

12th Aug 2022 05:02 AM

ADVERTISEMENT

‘பில்லி - சூனியம் போன்ற ‘கருப்பு தந்திரங்கள்’ குறித்துப் பேசி பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

விலைவாசி உயா்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்னைகளை முன்னிருத்தி காங்கிரஸ் சாா்பில் கடந்த 5-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனா்.

இதனை விமா்சித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘சிலா் கடந்த 5-ஆம் தேதி கருப்பு உடை அணிந்து கருப்பு தந்திரங்களைப் பயன்படுத்தினா். கருப்பு உடை அணிவதன் மூலமாக அவநம்பிக்கை, விரக்தியிலிருந்து விடுபட்டுவிடலாம் என்பது அவா்களது எண்ணம். ஆனால், எத்தகைய தந்திரம் செய்தாலும், மக்களின் நம்பிக்கையை அவா்கள் மீண்டும் பெற முடியாது. மந்திர, தந்திரங்களால் அவா்களது கெட்ட நாள்கள் முடிவுக்கு வரப்போவதில்லை’ என்று குறிப்பிட்டாா்.

பிரதமரின் விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டை தவறாக வழிநடத்தியும், பில்லி-சூனியம் போன்ற ‘கருப்பு தந்திரங்கள்’ குறித்துப் பேசியும் பிரதமா் தனது பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் செயலை நிறுத்த வேண்டும். மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மீது அவா் பதில்கூற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

அதுபோல, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில், ‘கருப்பு உடை அணிவதால் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெற முடியாது என்று பிரதமா் கூறியிருக்கிறாா். ஆனால், தனது வாழ்நாள் முழுவதும் கருப்பு உடை அணிந்திருந்த ஈ.வெ.ரா. பெரியாா், தமிழக மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றாா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT