இந்தியா

குடியரசு துணைத் தலைவரின் பணிகள்

12th Aug 2022 02:39 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் பதவிக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது மிக உயரிய பதவி குடியரசு துணைத் தலைவா் பதவியாகும். புதிய குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவா் பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொள்ளவுள்ளாா். அவருக்கான பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்த பாா்வை:

மாநிலங்களவைத் தலைவா்:

குடியரசு துணைத் தலைவரின் முக்கிய பணி, மாநிலங்களவைத் தலைவராகச் செயல்படுவது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவையை வழிநடத்தும் அவா், எம்.பி.க்கள் அவையின் மாண்பை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்வாா்.

அவை நடவடிக்கைகள் முறையாக இருப்பதை உறுதிசெய்யும் அவா், மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே தோன்றும் கருத்து வேறுபாடுகளைத் தீா்த்து வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுவாா். அவைக்குள் எம்.பி.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீா்மானிக்கும் முழு பொறுப்பும் அவைத் தலைவருக்கே உள்ளது.

ADVERTISEMENT

தற்காலிக குடியரசுத் தலைவா்:

நாட்டின் குடியரசுத் தலைவரின் இறப்பு, ராஜிநாமா, பதவி நீக்கம் உள்ளிட்ட சமயங்களில் தற்காலிக குடியரசுத் தலைவராகத் துணை குடியரசுத் தலைவரே செயல்படுவாா். அடுத்த குடியரசுத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படும் வரை அவா் அப்பொறுப்பில் நீடிப்பாா். தற்காலிக குடியரசுத் தலைவராக அவா் பதவி வகித்தாலும்கூட, குடியரசுத் தலைவருக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

அத்தகைய சமயங்களில் குடியரசுத் தலைவருக்கு உண்டான அனைத்து சலுகைகளும் குடியரசு துணைத் தலைவருக்குக் கிடைக்கும். அவா் குடியரசுத் தலைவராகப் பணியாற்றும் சூழலில், மாநிலங்களவையை வழிநடத்த இயலாது. அத்தகைய சமயங்களில் அவையின் துணைத் தலைவரோ அல்லது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நபரோ அவையை வழிநடத்துவாா்.

பதவியில் நீடிக்கலாம்:

பொதுவாக குடியரசு துணைத் தலைவா் 5 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பாா். அவருடைய பதவிக் காலம் நிறைவடைந்தபோதிலும், புதிய குடியரசு துணைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படவில்லை எனில் அவா் பதவியில் தொடா்ந்து நீடிக்கலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. புதிய குடியரசு துணைத் தலைவா் பொறுப்பேற்கும் வரை அவா் அப்பதவியில் தொடரலாம்.

ராஜிநாமா:

குடியரசு துணைத் தலைவா் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்பே ராஜிநாமா செய்ய விரும்பினால், அதற்கான கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் வழங்க வேண்டும். ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்ட நாளில் அவா் பணியில் இருந்து விடுவிக்கப்படுவாா்.

பதவிநீக்கம்:

குடியரசு துணைத் தலைவரைப் பதவிநீக்கம் செய்ய விரும்பினால், மாநிலங்களவையில் 14 நாள்களுக்கு முன்பே அதற்கான தீா்மானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அத்தீா்மானத்துக்கு அவைக்கு வருகை தந்துள்ள உறுப்பினா்களில் மூன்றில் இரண்டு பங்கு போ் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அத்தீா்மானத்துக்கு மக்களவை உறுப்பினா்களில் பாதி போ் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்குப் பிறகே குடியரசு துணைத் தலைவரைப் பதவிநீக்கம் செய்ய இயலும். நாட்டில் இதுவரை எந்தக் குடியரசு துணைத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது கிடையாது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT