இந்தியா

கூட்டுறவுச் சங்கங்களில் மேலும் சீர்திருத்தங்கள்: அமித் ஷா வலியுறுத்தல்

10th Aug 2022 03:45 AM

ADVERTISEMENT

கூட்டுறவுச் சங்கங்களில் மேலும் அதிக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
 இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
 கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்துவதும் நவீனப்படுத்துவதும் அவசியம். இத்துறை புறக்கணிக்கப்படும் துறையாக இருந்து வருகிறது.
 கூட்டுறவுத்துறையில் வேகமான முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். நாம் மாறியாக வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் நம்மை மாற்றி விடுவார்கள்.
 கூட்டுறவுத் துறையில் தேர்தல் நடைமுறை உள்ளிட்ட மூன்று அம்சங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது அவசியமாகும். இத்துறையில் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும். இதில் மாற்றத்தைக் கொண்டுவர நாம் விரும்புகிறோம்.
 கூட்டுறவு அமைப்புகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு உருவாக்கப்படும்.
 கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஒரே ஆட்களே நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவது சரியல்ல. இந்த ஏற்பாடு நல்லதல்ல.
 முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் தலைவராக நானே கடந்த 25 ஆண்டுகளாக இருக்கிறேன். இது இந்த ஆண்டில் மாற்றப்படும்.
 கூட்டுறவு அமைப்புகளுக்கான பணியாளர் தேர்விலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது அவசியம். இதற்கான விதிமுறைகளை கூட்டுறவு அமைச்சகம் வகுத்து வருகிறது.
 கூட்டுறவுத் துறையில் மேலும் அதிக சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 புதிய கூட்டுறவுக் கொள்கையை மத்திய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக தகவல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. தவிர கூட்டுறவுத் துறை தொடர்பாக பயிற்சி அளிக்க ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க ஓர் ஏற்றுமதிக் கூடமும் உருவாக்கப்படும்.
 பல மாநில கூட்டுறவுச் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவர உள்ளது என்றார்.
 
 

Tags : Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT