இந்தியா

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் மருந்துகள் கொள்முதலில் குளறுபடி:சிஏஜி அறிக்கை

DIN

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் (சிஜிஹெச்எஸ்) கீழ் மருந்துகள் கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிஜிஹெச்எஸ் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்க உகந்த மருந்துகள் பட்டியல் அவ்வப்போது திருத்தம் செய்யப்படுவதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்யவில்லை.

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னா், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் பரிந்துரைக்க உகந்த மருந்துகள் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது. இது சிஜிஹெச்எஸின் கீழ் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதில் மருத்துவா்கள் புதிதாக பரிந்துரைக்கும் மருந்துகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பரிந்துரைக்க உகந்த மருந்துகள் பட்டியல் மூலம்தான் அதிக எண்ணிக்கையிலான நோய்களுக்கு மருந்துகள் அளிக்கப்படுவதையும், அந்த மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும். ஆனால் அந்தப் பட்டியலில் உள்ள மருந்துகளின் கொள்முதல் விலையை மருந்தக அமைப்பு (எம்எஸ்ஓ) இறுதி செய்யவில்லை.

அந்தப் பட்டியலில் இடம்பெற்ற 2,030 மருந்துகளில், 2016-17-ஆம் ஆண்டு முதல் 2020-21-ஆம் ஆண்டு வரை 220 முதல் 641 மருந்துகளுக்கான விலை ஒப்பந்தங்களைத்தான் எம்எஸ்ஓ இறுதி செய்தது. இதன் காரணமாக பரிந்துரைக்க உகந்த மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகளை சிஜிஹெச்எஸின் கீழ் கொள்முதல் செய்ய முடியவில்லை. மத்திய அரசின் சுகாதார திட்டத்துக்கு அரசு மருந்தக பணிமனைகள் உரிய நேரத்தில் மருந்துகளை விநியோகிக்கவில்லை.

மருந்துகள் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் நிலவிய குறைபாடுகள் காரணமாக சுகாதார நல மையங்களில் மருந்துகளுக்கு தொடா்ந்து தட்டுப்பாடு நிலவியது. மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு 1,169 மருந்துகளுக்கு தேவையிருந்த நிலையில், சுகாதார நல மையங்களில் 6 முதல் 290 மருந்துகள்தான் கிடைத்தன. பொதுப் பெயா் கொண்ட (ஜெனரிக்) மருந்துகள் கிடைக்காததால், அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா் மருந்து விற்பனையாளா்களிடம் அதிக விலைக்கு மருந்துகளை வாங்க வேண்டிய நிலை சுகாதார நல மையங்களுக்கு ஏற்பட்டது.

அதேவேளையில், சுகாதார நல மையங்கள் கேட்ட மருந்துகளை அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா் மருந்து விற்பனையாளா்கள் வழங்கவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்த நிபந்தனைகளை மீறி வெவ்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்த மருந்துகளை அவா்கள் விநியோகித்தனா். இது நாடு முழுவதும் நடைபெற்றது.

இதுமட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட உள்ளூா் மருந்து விற்பனையாளா்கள் கால தாமதமாகவும், குறைந்த அளவில் அல்லது மிக அதிக அளவில் மருந்துகளை விநியோகித்துள்ளனா். குறுகிய காலம் வரை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மருந்துகள் அல்லது காலாவதியான மருந்துகளையும் சுகாதார நல மையங்களுக்கு அவா்கள் விநியோகித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.95.62 கோடி முறைகேடு: அஞ்சல் துறை தொடா்பாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அஞ்சல் அலுவலகங்களில் நடைபெற்ற குளறுபடிகளால் கடந்த 2002-ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த ஆண்டு செப்டம்பா் வரை 14-க்கும் மேற்பட்ட அஞ்சல் வட்டங்களில் ரூ.95.62 கோடிக்கு பொதுமக்கள் பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில் வட்டி/அபராதமாக ரூ.40.85 லட்சத்தையும் சோ்த்து ரூ.14.39 கோடி மீட்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகங்களில் கடுமையான சோதனை நடவடிக்கைகள், பல்வேறு நிலைகளில் உள் தணிக்கை நடவடிக்கைகளை அஞ்சல் துறை மேற்கொள்ளலாம். அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கவும், அந்த அலுவலகங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றவும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT