இந்தியா

கர்நாடகத்தில் சிறுத்தை நடமாட்டம்: 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

8th Aug 2022 11:40 AM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தின் பெலகவி நகரில் சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிளப் ரோடு அருகே உள்ள கோல்ப் மைதானத்தில் ஞாயிறன்று சிறுத்தையை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஜாதவ் நகரில் வெள்ளியன்று தொழிலாளி மீது சிறுத்தை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு கோல்ப் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்தது. 

இதற்கிடையில் மற்றொரு நபரைத் தாக்கும் முன் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை மற்றும் காவல்துறையினர் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்கள் நடமாடும்போது கவனமாக இருக்குமாறும் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான கூலித்தொழிலாளி சித்தராயி மிராஜ்கரின் தாயார் 65 வயதான சாந்தா, தாக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மகன் இறந்துவிட்டதாக தாய் நினைத்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்டவர் தாக்குதலில் இருந்து தப்பித்து மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார். சிறுத்தையின் நடமாட்டம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தெற்கு கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள 
ஹெக்கடதேவனகோட் நகரில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவதால், மக்கள் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். கால்நடைகளைத் தாக்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.  அங்குச் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT