இந்தியா

பென்சில் விலை: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது, மோடிக்கு சிறுமி எழுதிய கடிதம்!

DIN

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் தன்னால் பென்சில், மேகி கூட வாங்க முடியவில்லை என்றும், எனது பென்சிலை மற்ற குழந்தைகள் எடுத்துக்கொள்கின்றனர், அம்மாவிடம் பென்சில் கேட்டால் அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? என விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டு அவையின் செயல்பாடுகளை முடக்கி வருகின்றன. 

இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதல் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி கிருத்தி துபே, விலைவாசி உயர்வால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், கனூஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற 6 வயது சிறுமி முதல் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "என் பெயர் கிர்த்தி துபே, நான் முதல் வகுப்பு படித்து வருகிறேன். நீங்கள் விலைவாசியை வெகுவாக உயர்த்திவிட்டீர்கள். நான் உபயோகிக்கும் பென்சில், ரப்பா் (அழிப்பான்) விலையெல்லாம் உயா்ந்துவிட்டது. மேகியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? என் பென்சிலை பிற மாணவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்".

மேலும், நான் விரும்பி சாப்பிடும் மேகியின் விலையும் உயர்ந்துவிட்டது. கடைக்கு சென்று மேகி வாங்கலாம் என்றால் கடைக்காரர் ரூ.7 கேட்கிறார். என்னிடம் ரூ.5 மட்டுமே உள்ளது. இதனால் மேகி வாங்க முடியவில்லை’ நான் என்ன செய்வது என விலைவாசி உயர்வு குறித்து ஹிந்தியில் பிரதமர் மோடிக்கு வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிறுமியின் தந்தையான வழக்குரைஞர் விஷால் துபே, "சமீபத்தில் பள்ளியில் பென்சிலை தொலைத்தபோது அவளது அம்மா திட்டியதால் எரிச்சலடைந்த என் மகளின் மன் கிபாத் தான்" இந்த கடிதம் என கூறினார். 

இது குறித்து சிப்ரமாவ் மாவட்டத்தின் துணை ஆட்சியர் அசோக் குமார் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,  ‘சிறுமியின் கடிதம் சமூக ஊடகங்கள் மூலம்தான் அறிந்தேன். குழந்தைக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், சிறுமியின் கடிதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என்று அவர் கூறினார்.

கனிமொழி:

 
நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி உரையில்கூட சிறுமியின் கடிதத்தை மேற்கொள் காட்டி பேசினார்.

மக்களவையில் விலைவாசி உயா்வு குறித்து திங்கள்கிழமை நடந்த விவாதத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி பேசியதாவது: பாஜக ஆளாத மாநிலங்களில் கோடி கோடியாக கறுப்புப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாஜக உறுப்பினா் நிஷிகாந்த் துபே குறிப்பிட்டாா். 2016- ஆம் ஆண்டு, பணம் மதிப்பிழப்புத் திட்டம் வந்த போது, கறுப்புப் பணமே இல்லாமல் ஆகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது கறுப்புப் பணம் எப்படி உலவுகிறது? பிரதமா் மோடிக்கு கனோஜ் மாவட்டத்தைச் சோ்ந்த கிருத்தி துபே என்கிற குழந்தை, ‘நான் உபயோகிக்கும் பென்சில், ரப்பா் விலையெல்லாம் உயா்ந்துவிட்டது. நான் பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறாா்’ என்று கடிதம் எழுதியுள்ளாா். இப்படி அடித்தட்டில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு நிலைமையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது.

இந்த ஆட்சி பதவியேற்றுக் கொள்வதற்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை என்ன? சமையல் எண்ணெய் விலை என்ன? இவை இரண்டு மடங்கு விலை உயா்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், உணவுப் பொருள்கள் விலையும் அதிகரித்துள்ளது. நாட்டில் அடித்தட்டு மக்கள் தங்கள் வருமானத்தில் பாதி எரிபொருளுக்கு செலவழித்தால்,எப்படி வாழ டியும்?. சா்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், சாமானிய மக்களுக்கு அந்த பயன் கிடைக்கவில்லை. அவா்களுக்கு தேவையான பொருள்களில் ஜிஎஸ்டி வரியும் உயா்த்தப்படுகிறது. கொவைட் -19-இன் போது தனியாா் நிறுவனங்கள் ஊழியா்களின் ஊதியத்தை குறைத்துள்ளன.

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில், இந்தியாவில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், நடுத்தர வா்க்கத்தில் இருந்த 3.2கோடி இந்தியா்கள் ஏழ்மை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் இன்றைய நிலை. ஆனால், இந்தியாவில் இருக்கின்ற ஒரு தொழில் அதிபா் உலகத்திலேயே 4-ஆவது பணக்காரராக உயா்வு பெற்றுள்ளாா். இதற்குக் காரணம் பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுக்கப்பட்டு வருவதுதான். தொழில் வளா்ச்சி வேண்டும். ஆனால், அடித்தட்டில் இருக்கக் கூடியவா்களுக்கு உதவி செய்யத் தயங்கும் இந்த ஆட்சி, பெருநிறுவனங்களுக்கு மட்டும் தொடா்ந்து உதவிகளை செய்து அவற்றின் வளா்ச்சிக்கு உதவுகிறது என்று கனிமொழி குற்றம் சாட்டினாா்..

மேலும், கடந்த அக்டோபரில் மட்டும் 5 மில்லியன் பேருக்கு வேலை இல்லாமல் போகக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய ரிசா்வ் வங்கி கடன் தரத் தயாராக இல்லை பாஜக உறுப்பினா் நிஷிகாந்த் குறிப்பிடுகிறாா். ஆனால், நாங்கள் கேட்பது கடன் அல்ல; நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை மாநிலங்களுக்கு தந்தால் போதும் என்றாா் கனிமொழி.

ஆணவம் கண்ணை மறைக்கிறது: ராகுல் காந்தி

விலைவாசி உயா்வு குறித்து மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது, ‘நாட்டில் பணவீக்கத்தை எதிா்க்கட்சிகள் தேடிக் கொண்டிருக்கின்றன; ஆனால், அவா்களால் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஜெயந்த் சின்ஹா பேசினாா்.

இந்நிலையில், முகநூல், ட்விட்டரில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் பணவீக்க பிரச்னையே இல்லை என்பதுதான் மத்திய அரசின் கருத்தாக உள்ளது. ஆணவம் கண்ணை மறைப்பதால், அவா்களுக்கு பணவீக்கம் புலப்படவில்லை. நாட்டின் சொத்துகளை தங்களுக்கு வேண்டிய நண்பா்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறாா்கள்.

வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி நாடு தவித்துக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான குடும்பங்கள் நிலையான வருமானமின்றி வேதனையில் உள்ளனா். தினசரி உணவுக்கே போராடும் நிலை நிலவுகிறது. ஆனால், மத்திய அரசோ தங்களது ‘ஆணவ அரசரின்’ பிம்பத்துக்கு மெருகூட்ட கோடிக்கணக்கில் செலவிடுகிறது.

நாட்டு மக்களின் குரலாக காங்கிரஸ் தொடா்ந்து ஒலிக்கும். மக்கள்தான் காங்கிரஸின் வலிமை. மக்களின் குரலை ஒடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக போராடுவோம்.

‘சா்வாதிகார ஆட்சியாளா்’ சொல்லும் அனைத்து விஷயங்களையும் மக்கள் எந்த கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறது. அவா்களைக் கண்டு மக்கள் அஞ்சக் கூடாது. மக்கள் ஒன்றுபட்டுவிட்டால், சா்வாதிகார அரசு பயந்துவிடும். எனவேதான், மக்களின் ஒற்றுமையை சீா்குலைக்கும் முயற்சிகளில் அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது என்று ராகுல் கூறயுள்ளாா்.

மேலும், கடந்த 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலையை ஒப்பிட்டு, பட்டியல் ஒன்றையும் ராகுல் வெளியிட்டுள்ளாா்.

நிா்மலா சீதாராமன்: 
மாநிலங்களவையில் விலைவாசி மீதான விவாதத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்து பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. இருப்பினும், சா்வதேச காரணிகள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சில்லறை பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவர மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. நுகா்வோா் விலை குறியீடு சாா்ந்த பணவீக்கத்தை 4 சதவீதத்தில் நிலைநிறுத்துமாறு ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

தொடா்ந்து, அத்தியாவசிய பொருள்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்கவில்லை என அவா் விளக்கமளித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பாக பருப்பு, மாவு, தயிா், பன்னீா் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு அனைத்து மாநிலங்களும் வரி விதித்தன. ஆனால் ஏழைகள் பயன்படுத்தும் இந்தப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரி விதிக்கவில்லை.

வங்கிகளில் வாடிக்கையாளா்களுக்கு எடுக்கும் பணத்துக்கும், காசோலை புத்தகத்துக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. மேலும் இடுகாடு கட்டுமானத்துக்குத் தான் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதே தவிர, இடுகாட்டுக்கு அல்ல. இதேபோல மருத்துவமனை படுக்கைகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. மாறாக, நாளொன்றுக்கு ரூ.5,000 வாடகை வசூலிக்கப்படும் அறைக்குதான் வரி விதிக்கப்படுகிறது’ என்றாா்.

முன்னதாக விலைவாசி உயா்வு மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினா் திருச்சி சிவா பேசுகையில், ‘ரூபாய் மதிப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் பெருநிறுவனங்கள் பயன் பெறுகின்றன; ஏழைகள் பாதிக்கப்படுகின்றனா். இது நல்ல அடையாளம் அல்ல’ என்றாா்.

தொடா்ந்து ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்.பி. மஹுவா மஜி, காங்கிரஸ் எம்.பி. ரஜனி அசோக்ராவ் பாட்டீல் உள்ளிட்ட எம்.பி.க்களும் விவாதத்தின்போது பேசினா்.

எதிா்க்கட்சிகளின் கேள்விக்கு பாஜக எம்.பி. கணஷியாம் திவாரி பதிலளிக்கையில், ‘உக்ரைன்-ரஷியா போா் உள்பட புவிசாா் அரசியல் சவால்கள் ஏராளமாக இருந்தபோதிலும், பிற நாடுகளைக் காட்டிலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என்றாா்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நிா்மலா சீதாராமன் பதிலளிக்கையில், ‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிடவில்லை. சா்வதேச நிலைக்கு ஏற்ப அதன் மதிப்பு இயல்பாக நகா்ந்து வருகிறது. நிலைமையை ரிசா்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ரூபாய் மதிப்பில் கடும் ஏற்ற-இறக்கம் காணப்படும்போது ரிசா்வ் வங்கி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றாா்.

ஓப்போ, விவோ, ஷாவ்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: 
வரி ஏய்ப்பு தொடா்பாக சீன கைப்பேசி நிறுவனங்களான ஓப்போ, விவோ, ஷாவ்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்தார். 

கைப்பேசி தயாரிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்ட சில பொருள்கள் குறித்து ஓப்போ நிறுவனம் தவறான விவரங்களை வழங்கியதுடன், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பை குறைத்து காண்பித்தது. இது அந்த நிறுவனம் குறைந்த அளவில் சுங்க வரி செலுத்த வழிவகுத்தது. இதுகுறித்த விசாரணையை தொடா்ந்து சுங்க வரியாக மொத்தம் ரூ.4,389 கோடி செலுத்தக் கோரி அந்த நிறுவனத்துக்கு வருவாய் புலனாய்வுத் துறை நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அந்த நிறுவனம் ரூ.450 கோடியை மட்டும்தான் செலுத்தியுள்ளது.

ஷாவ்மி நிறுவனம் ரூ.653 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதுதொடா்பாக அந்த நிறுவனத்துக்கு 3 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட நிலையில், ரூ.46 லட்சத்தை மட்டுமே ஷாவ்மி செலுத்தியுள்ளது.

விவோ நிறுவனத்தின் இந்திய பிரிவு ரூ.2,217 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. அதுதொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் ரூ.60 கோடியை மட்டும் செலுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே விவோ நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.1.25 லட்சம் கோடியாக உள்ளது. அந்த நிறுவனத்தால் நிறுவப்பட்ட 18 நிறுவனங்கள் மூலம் பெரும் தொகையை விவோ பரிவா்த்தனை செய்துள்ளது. அந்த 18 நிறுவனங்கள் அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் உள்ளன என்றாா் அவா்.

போலி கடன் செயலிகள் மீது நடவடிக்கை: கடன் அளிப்பதில் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் சீன நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படும் போலி டிஜிட்டல் கடன் செயலிகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதில்:

பெரும்பாலான போலி கடன் செயலிகள் குறிப்பிட்ட ஒரு நாட்டில்தான் தொடங்கப்படுகின்றன. அதன் விளைவாக கடன் பெற்ற பலா் துன்புறத்தப்படுகின்றனா். அந்த செயலிகள் மூலம் பணம் பறிக்கப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சில துறைகள் இணைந்து தொடா்ந்து பணியாற்றி வருகின்றன.

போலி நிறுவனங்கள் மூலம் இந்த கடன் செயலிகள் இயங்கும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கு உதவும் இந்தியா்கள் மீதும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி: 
‘வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் கோடி வாராக் கடனை தள்ளபடி செய்துள்ளன’ என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பாகவத் கே.கராட் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 1,61,328 கோடியாக இருந்த வங்கி கடன் தள்ளுபடி, 2018-29 ஆம் ஆண்டு ரூ. 2,36,265 கோடியாக அதிகரித்தது. பின்னா் 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 2,34,170 கோடி, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2,02,781 கோடியாகவும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,57,096 கோடியாகவும் வாராக் கடன் தள்ளுபடி படிப்படியாக குறைந்தது.

ஒட்டுமொத்தமாக 2017-18 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ரூ. 9,91,640 கோடி வங்கி வாராக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மேலும், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில்தான் அதிகபட்சமாக 2,840 போ் என்ற அளவில் உயா்ந்திருந்தது. இந்த எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டில் 2,700-ஆக குறைந்தது என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT