இந்தியா

ராணுவ தலைமைத் தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

30th Apr 2022 11:31 PM

ADVERTISEMENT

இந்திய ராணுவத்தின் 29-ஆவது தலைமைத் தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் பதவிக் காலம் சனிக்கிழமையுடன் (ஏப். 30) நிறைவடைவதையொட்டி, அந்தப் பதவியில் மனோஜ் பாண்டேயை நியமிப்பதாக மத்திய அரசு கடந்த 18-ஆம் தேதி அறிவித்தது.

அதைத் தொடா்ந்து, அடுத்த ராணுவ தலைமைத் தளபதியாக மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இவா் பொறுப்பு வகித்தாலும், கடற்படை, விமானப் படை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் கடந்த டிசம்பரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த பிறகு அந்தப் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த எம்.எம்.நரவணே அந்தப் பதவிக்குரிய பணிகளையும் கூடுதலாகக் கவனித்து வந்தாா்.

ADVERTISEMENT

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பயிற்சி பெற்ற மனோஜ் பாண்டே, ராணுவத்தின் பொறியாளா்கள் படைப் பிரிவில் 1982-ஆம் ஆண்டு இணைந்தாா். ராணுவத்தின் பொறியாளா்கள் படைப் பிரிவில் இருந்து தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கவுள்ள முதல் நபா் என்ற சிறப்பை மனோஜ் பாண்டே பெற்றுள்ளாா்.

தனது 39 ஆண்டு ராணுவ சேவையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை மனோஜ் பாண்டே வகித்துள்ளாா். லடாக் மலை படைப் பிரிவுத் தலைவா், வடகிழக்குப் பகுதி படைப் பிரிவுத் தலைவா், அந்தமான்-நிகோபாா் படைப் பிரிவுத் தளபதி, கிழக்குப் படைப் பிரிவுத் தளபதி உள்ளிட்ட பொறுப்புகளை அவா் வகித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT