இந்தியா

ஆராய்ச்சி-மேம்பாட்டுத் துறையில் தனியார் தொழில்துறை முதலீடு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

DIN

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் குறிப்பாக இணையவெளி தொழில்நுட்பங்களில் தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
 இந்திய ராணுவத் தளவாட உற்பத்தியாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியது:
 வேகமாக மாறி வரும் உலக பாதுகாப்புச் சூழல் காரணமாக ராணுவத் தளவாடங்களுக்கான தேவை அதிகரிக்கும். இந்த மாற்றங்களால் பாதிக்கப்படாத பகுதி எதுவும் உலகில் இல்லை. அதன் தாக்கத்தை வர்த்தகம், பொருளாதாரம், தகவல் தொடர்பு, அரசியல் சமன்பாடு, ராணுவ பலம் ஆகியவற்றில் காணலாம்.
 எனவே இந்திய பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சூழலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில், குறிப்பாக இணையவெளி தொழில்நுட்பங்களில் தனியார் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
 தனியார் துறைக்கு உகந்த வளர்ச்சிச்சூழலை நாம் வழங்கி வருகிறோம். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் ஆகியவற்றை இந்தியாவில் அரசுடன் இணைந்து தயாரிக்கும் முறையில் நாம் வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளோம் என்றார்.
 உள்நாட்டு தளவாட உற்பத்தித்துறையை ஊக்குவிக்க அரசு கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ராணுவ போக்குவரத்து விமானங்கள், இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், சில வகை ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்களை இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தி விடும் என்று ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார்.
 இறக்குமதி செய்யப்படும் ராணுவத் தளவாடங்களை சார்ந்து இருப்பதைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதுடன் உள்நாட்டு தளவாட உற்பத்தியை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளது.
 போர்க் கப்பல்கள் உள்பட இறக்குமதி நிறுத்தப்பட உள்ள 108 ராணுவத் தளவாடங்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது.
 வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாட உற்பத்தியின் விற்றுமுதலை 2500 கோடி டாலராக (சுமார் ரூ.1.75 லட்சம் கோடி) அதிகரிக்கவும், 500 கோடி டாலர் (சுமார் ரூ.35,000 கோடி) அளவுக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT