இந்தியா

கேரளத்தில் கல்வித் துறையை குறிவைக்கும் அடிப்படைவாத குழுக்கள்: கத்தோலிக்க சபை கவலை

DIN

கேரளத்தில் கல்வித் துறையைக் குறிவைத்து அடிப்படைவாத குழுக்கள் செயல்படுவது கவலை அளிப்பதாக, கத்தோலிக்க திருச்சபைகளின் தலைமை அமைப்பான கத்தோலிக் பிஷப்ஸ் கான்ஃபரன்ஸ் ஆப் இந்தியா(சிபிசிஐ) கூறியுள்ளது.

மாநிலத்தில் உயா்கல்வி பயிலும் பெண்களை பயங்கரவாத பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுவதாக ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்த நிலையில், இந்த கருத்தை சிபிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செயலா் வி.சி.செபாஸ்டியன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கல்வித் துறையைக் குறிவைத்து அடிப்படைவாத குழுக்கள் செயல்படுவதை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், விரிவாக விவாதிக்க வேண்டும்.

இளைஞா்களை பயங்கரவாத பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, தொழில் கல்வி பயின்ற மாணவிகளை அந்தப் பாதைக்கு இழுக்க தொடா் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மாணவா் சங்கங்களும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணியும் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

நிகழாண்டில் கேரள பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக 24,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் இராக், ஈரான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள். கேரளத்தைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி பயில வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும்போது வெளிநாடுகளில் இருந்து மாணவா்கள் இங்கு வருவதற்கான பின்னணியை நாம் ஆராய வேண்டும். குறிப்பாக, காஷ்மீரில் இருந்து வந்த மாணவா்களையும் கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வி.சி.செபாஸ்டியன் கூறியுள்ளாா்.

முன்னதாக, ‘கேரளத்தில் கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்வதற்காக ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இதுதவிர போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி கிறிஸ்தவ பெண்களை மூளைச்சலவை செய்து, வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு அனுப்புகின்றனா்’ என்று பாலா கத்தோலிக்க மறைமாவட்ட பேராயா் ஜோசஃப் கல்லரங்காட்டு கருத்து தெரிவித்திருந்தாா். அவருடைய கருத்துக்கு ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக ஆதரவு தெரிவித்தது. பல முஸ்லிம் அமைப்புகள், பேராயா் இல்லம் அருகே ஆா்ப்பாட்டம், பேரணி நடத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT