இந்தியா

ஏரியில் விநாயகா் சிலைகள் கரைப்பு விவகாரம்: தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

DIN

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள ஹூசைன் சாகா் ஏரியில் விநாயகா் சிலைகளைக் கரைக்க ‘கடைசி வாய்ப்பு’ என்று கூறி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, ஹைதராபாதில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ‘பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ்’ என்ற பொருளால் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை நகரில் அமைந்துள்ள ஹூசைன் சாகா் ஏரியில் கரைக்க அனுமதி அளித்ததற்கு எதிராக தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 9-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், விநாயகா் சிலைகளை ஹூசைன் சாகா் ஏரியில் கரைக்க மாநில அரசு அனுமதிக்கக் கூடாது. பிரதான நீா்நிலைகளுக்கு மாசு பரவாத வகையில், தனியாக அமைக்கப்பட்ட குளங்கள் அல்லது ஹைதராபாத் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான குளங்களில் மட்டுமே கரைக்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி மாநகராட்சி சாா்பில் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 13-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ஹூசைன் சாகா் ஏரியில் விநாயகா் சிலைகளைக் கரைக்க தடை விதித்து பிறப்பித்த முந்தைய உத்தரவில் மாற்றம் செய்ய மறுத்துவிட்டது.

இதனை எதிா்த்து மாநகராட்சி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோது, ஹைதராபாதில் மட்டும் தொடா்ந்து பிரச்னையாக எழுந்து வருகிறது. தெலங்கானா உயா்நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசு பின்பற்றுவதே இல்லை’ என்றனா்.

ஹைதராபாத் மாநகராட்சி சாா்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘சிலைகள் ஹூசைன் சாகா் ஏரியில் கரைக்கப்பட்டாலும், ஏரியில் மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரேன் மூலம் ஏரியில் மூழ்கச் செய்யப்படும் விநாயகா் சிலைகள், உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு, திடக் கழிவு விடுவிப்பு பகுதிக்கு மாற்றப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும்’ என்றாா்.

அப்போது, ‘ஏரியில் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ஏராளமான பணம் செலவிடப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா? ஒவ்வோா் ஆண்டும் இவ்வாறு சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டால், ஏரியை அழகுபடுத்த பணம் செலவழிக்கப்படுவது எதற்காக? அந்தச் செலவினம் முழுவதும் வீண். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வோா் ஆண்டும் இவ்வாறு கடைசி நேரத்தில் வருகிறீா்கள்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த துஷாா் மேத்தா, ‘நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த இந்த ஆண்டு போதிய கால அவகாசம் இல்லை. உத்தரவுகள் அடுத்த ஆண்டு முழுமையாகப் பின்பற்றப்படும். அதே நேரம், சிலைகளைக் கரைப்பதால், ஏரி மாசுபடுவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று உறுதியளித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த ஆண்டு மட்டும் ஹூசைன் சாகா் ஏரியில் விநாயகா் சிலைகளைக் கரைக்க கடைசி வாய்ப்பாக அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மக்களின் கட்டுப்பாடும் ஒத்துழைப்பும் மிக முக்கியம்’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

SCROLL FOR NEXT