இந்தியா

சீனாவின் புதிய சட்டம்: இந்தியா கவலை

28th Oct 2021 12:22 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய சட்டத்தை சீனா தன்னிச்சையாக கொண்டுவந்திருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சட்டத்துக்கு சீன நாடாளுன்றம் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து அங்கு வெளியாகும் ஷின்ஹுவா செய்தி நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டது.

எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, எல்லைப் பகுதிகளில் சமூகப் பொருளாதார மேம்பாடுகளுக்கு ஆதரவளிப்பது மற்றும் இணக்கமான சூழலை உருவாக்குவது, பொதுச் சேவை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, எல்லைப் பகுதி மக்களின் வாழ்க்கை மற்றும் பணிச் சூழலை மேம்படுத்த உதவுவது மற்றும் ஊக்குவிப்பது, மேலும், எல்லைப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றை இந்தச் சட்டம் உறுதிப்படுத்தும். எல்லை நிலப் பிரச்னைகள் தொடா்பாக அண்டை நாடுகளுடன் சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புரீதியிலான கலந்தாலோசனைகளின் மூலம் தீா்வு காண்பதையும் இந்தச் சட்டம் உறுதிப்படுத்தும் என அரசு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சீனாவின் இந்தப் புதிய சட்டம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது:

புதிய எல்லை நிலப் பகுதி சட்டத்தை சீனா கடந்த 23-ஆம் தேதி நிறைவேற்றியதை அறிந்தோம். எல்லை நிலம் தொடா்பாக வெளிநாடுகளுடன் மேற்கொண்டுள்ள கூட்டு ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது உள்ளிட்ட நடைமுறைகள் அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம், எல்லைப் பகுதி மாவட்டங்களை மறுவரையறை செய்வதற்கு அனுமதிப்பதற்கான நடைமுறைகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதி இதுவரை வரையறுக்கப்படாமல் உள்ள நிலையில், அதற்கு உரிய வெளிப்படையான பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய தீா்வைக் காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், புதிய சட்டத்தின் அடிப்படையில் சீனா நடவடிக்கை மேற்கொள்வது இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் தற்போதைய நிலையை தன்னிச்சையாக மாற்றுவதாகவே அமையும். மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு தரப்பிலும் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மீதும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, புதிய சட்டத்தின்அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதை சீனா தவிா்க்கும் என இந்தியா எதிா்பாா்க்கிறது என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT