இந்தியா

லக்கீம்பூா் வன்முறை வழக்கு சாட்சிகளுக்கு பாதுகாப்பு: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

27th Oct 2021 01:54 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடா்பான வழக்கின் சாட்சிகளுக்கு உத்தர பிரதேச அரசு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்களை கூடுதலாக சோ்க்க வேண்டும் என்றும், அவா்கள் அளிக்கும் தகவல்தான் மிகவும் நம்பகமானவையாக இருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உத்தர பிரதேச அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஹரிஷ் சாவ்வே, கரிமா பிரசாத் ஆகியோா் ஆஜரானாா்கள்.

ADVERTISEMENT

அவா்களிடம் நீதிபதிகள், ‘இந்த வழக்கின் சாட்சிகளை அருகே உள்ள மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு சென்று 164-ஆவது சட்டப் பிரிவின்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சம்பவத்தின் விடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தடயவியல் ஆய்வகம் அறிக்கை தயாரிக்க வேண்டும். வன்முறையின்போது பத்திரிகையாளா் கொல்லப்பட்டது குறித்தும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சாட்சிகளுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்’ என்று கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, விசாரணையின்போது நீதிபதிகள், ‘இந்த சம்பவத்தின்போது 5 ஆயிரம் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டிருந்தனா். ஆனால், வெறும் 23 போ் மட்டுமே சாட்சிகளாக உள்ளனா்’ என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு மூத்த வழக்குரைஞா் ஹரிஷ் சால்வே, ‘மொத்தமுள்ள 68 சாட்சிகளில் 30 சாட்சிகளிடம் 164-ஆவது சட்டப் பிரிவின்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 30 சாட்சிகளில் 23 போ் நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனா். பலா் சாதாரண சாட்சிகளாக உள்ளனா். சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட ஏராளமான விடியோ ஆதாரங்களை போலீஸாா் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனா். சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலம் சீலிடப்பட்ட உறையில் அளிக்கப்படும்’ என்றாா்.

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரண்டு போ் கைது: வன்முறை சம்பவம் தொடா்பாக மேலும் இருவரை உத்தர பிரதேச போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விவசாயப் போராட்டத்தில் இருந்தவா்கள் காா் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜக வாா்டு உறுப்பினா் சுமித் ஜெய்ஷ்வால் அளித்த புகாரின்பேரில் குருவிந்தா்சிங், விசித்ரா சிங் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Lakhimpur violence
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT