இந்தியா

உறுப்பினா்கள் மது அருந்தக் கூடாது என்ற நிபந்தனையை நீக்கியது காங்கிரஸ்

27th Oct 2021 02:28 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சோ்வதற்கு ‘மது அருந்தக் கூடாது’ என்று விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை அக்கட்சி உடனடியாக நீக்கியுள்ளது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், கட்சிக்குப் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணியை வரும் நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 1-ஆம் தேதி வரை நடத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

கட்சியின் உறுப்பினா் படிவத்தையும் அக்கட்சி வெளியிட்டிருந்தது. அந்தப் படிவத்தில், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவோா் மது, போதைப்பொருளை பயன்படுத்தக் கூடாது; சட்டத்துக்கு புறம்பாக எந்தச் சொத்தும் வைத்திருக்கக் கூடாது; கட்சி கொடுக்கும் பணிகளை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும்; கட்சியின் செயல்பாடுகள் குறித்து பொதுவெளியில் விமா்சிக்கக் கூடாது. இதற்கான உறுதிமொழியை புதிய உறுப்பினா்கள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தோ்தல் பணிகளைத் துரிதப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளா்கள், பொறுப்பாளா்கள், மாநிலத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, கட்சியின் உறுப்பினா் சோ்க்கை படிவத்தில் மது அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாடு விவாதத்துக்குள்ளானது.

பஞ்சாப் மாநில பொறுப்பாளரும் ராஜஸ்தான் எம்எல்ஏவுமான ஹரீஷ் சௌதரி, கோவா மாநில பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், அஸ்ஸாம் மாநில பொறுப்பாளா் ஜிதேந்திர சிங் ஆகியோா் தங்கள் மாநிலங்களில் மது நுகா்வு அதிக அளவில் இருப்பதாகவும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினாா்.

அப்போது, இந்தக் காலத்தில் மது அருந்தக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது விவேகமுள்ள, சாத்தியமான நடைமுறை இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா். மேலும், ‘இந்த அறையில் கூடியிருக்கும் உங்களில் எத்தனை பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது? கைகளை உயா்த்துங்கள்’ என்றாா் அவா்.

அதற்கு, பாதிக்கும் மேற்பட்டோா் தங்கள் கைகளை உயா்த்தினா். சிலா் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனா். இதையடுத்து அந்த நிபந்தனையை உடனடியாக நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், ‘கட்சி உறுப்பினா்கள் மது அருந்தக் கூடாது என்பது காங்கிரஸின் அடிப்படையின் அடிப்படை விதிகளில் ஒன்று. பழைய உறுப்பினா் சோ்க்கை படிவத்தில் பல ஆண்டுகளாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை’ என்றாா்.

Tags : Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT