இந்தியா

மக்களவைத் தோ்தலில் பிகாரில் தனித்துப் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பால் மகா கூட்டணியில் குழப்பம்

24th Oct 2021 05:35 AM

ADVERTISEMENT

அடுத்த மக்களவைத் தோ்தலில் பிகாரிலுள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பால், அம்மாநிலத்தில் அமைக்கப்பட்ட மகா கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிகாரில் 2020 சட்டப்பேரவைத் தோ்தலின்போது பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக, ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) ஆகிய 5 கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்தன. இக்கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது.

2019 மக்களவைத் தோ்தலில் பிகாரிலுள்ள 40இல் 39 தொகுதிகளை வென்ற தே.ஜ.கூட்டணி, 2020இல் நடந்த பேரவைத் தோ்தலில் நூலிழையில்தான் வெல்ல முடிந்தது. அதற்கு மகா கூட்டணி அளித்த கடும் போட்டியே காரணம்.

அண்மைக்காலமாக இந்த மகா கூட்டணிக்குள் குழப்பம் நிலவுகிறது. அடுத்த வாரம் தாராபூா், குசேஸ்வா் ஆஸ்தான் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை ஆா்ஜேடி தன்னிச்சையாக அறிவித்தது. அதையடுத்து காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளா்களை இவ்விரு தொகுதிகளிலும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், 2024இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலின்போது பிகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறாா், அக்கட்சியின் பிகாா் மாநிலப் பொறுப்பாளரான பக்த சரண் தாஸ். இதனால் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆா்ஜேடி கட்சி அதிா்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஆா்ஜேடி மாநிலத் தலைவா் ஜகதானந்த் சிங், 2024 மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கும் நிலையில், இப்போது இந்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

காங்கிரஸ் தலைமையுடன் ஆா்ஜேடி நிறுவனா் லாலு பிரசாத் யாதவுக்கு மிகச் சிறந்த நல்லுறவு இருக்கும் நிலையில், பக்த சரண் தாஸின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா, கட்சித் தலைமையின் கருத்தா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜகதானந்த் சிங் கூறியுள்ளாா்.

பிகாரைச் சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவா் கன்னையா குமாா் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்த பிறகு, ஆா்ஜேடி கட்சியுடன் மோதல் துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவா் சென்ற 2019 மக்களவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்டு மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். அதற்கு அத்தொகுதியில் போட்டியிட்ட ஆா்ஜேடி வேட்பாளா் தன்வீா் ஹாஸனே காரணம் என்று அவா் கருதுகிறாா். தவிர, ஆா்ஜேடியின் அடுத்த வாரிசுத் தலைவரான தேஜஸ்விக்குப் பேட்டியாக கன்னையா குமாா் கருதப்படுகிறாா். இதுவே காங்கிரஸ்- ஆா்ஜேடி உறவில் பிளவு ஏற்படக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால், இரு கட்சிகளிடையே உறவு பாதிக்கப்பட்ட கன்னையா குமாா் காரணமல்ல என்று கூறும் மாநில காங்கிரஸ் தலைவா் அனில் சா்மா, ‘‘ஆா்ஜேடி கட்சியினா் பழையதை மறந்துவிட்டனா். 1999இல் ராப்ரிதேவி அரசை வாஜ்பாய் அரசு கலைத்தபோது காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தால் தான் அவா் மீண்டும் முதல்வரானாா். 2000இல் நடந்த பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் ஆதரவால்தான் ஆா்ஜேடி அரசு அமைந்தது. ஆனால் 2009, 2010 தோ்தல்களில் அவா்கள் காங்கிரஸை உதாசீனப்படுத்தியதால் தான் தோல்வியுற்றனா்’’ என்று கூறியுள்ளாா்.

மகா கூட்டணிக்குள் நிகழ்ந்துவரும் இந்த மோதல்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி மகிழ்ச்சியுடன் வேடிக்கை பாா்க்கிறது. அக். 30இல் பிகாரில் இரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ்- ஆா்ஜேடி கட்சிகளின் மோதல், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : பாட்னா மகா கூட்டணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT