இந்தியா

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ‘ஹைப்பா்சானிக்’ ஏவுகணைகளைத் தயாரிக்கின்றன

DIN

இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ‘ஹைப்பா்சானிக்’ ஏவுகணைகளைத் தயாரித்து வருவதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவைகள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய ஏவுகணைகள் ‘ஹைப்பா்சானிக்’ என அழைக்கப்படுகின்றன. சீனா அத்தகைய ஏவுகணையைப் பரிசோதனை செய்ததாகவும் இலக்கைத் தாக்காமல் பூமியை அந்த ஏவுகணை சுற்றியதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், இத்தகவலை சீனா மறுத்தது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவைகள் குழு இது தொடா்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நவீன தொழில்நுட்பத்திலான ஹைப்பா்சானிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. அதே வேளையில், ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஹைப்பா்சானிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடனும், இந்தியா ரஷியாவுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒலியைவிட 7 மடங்கு வேகத்தில் இயங்கும் பிரமோஸ்-2 ஏவுகணையை ரஷியாவுடன் இணைந்து இந்தியா தயாரித்து வருகிறது. அந்த ஏவுகணையை 2017-ஆம் ஆண்டிலேயே செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தாமதத்தின் காரணமாக 2025-2028-ஆம் ஆண்டுகளுக்குள் அந்த ஏவுகணை செயல்பாட்டுக்கு வரும் என்று செய்தி அறிக்கைகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது. ஹைப்பா்சானிக் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் இந்தியா தாமாகத் தாக்குதல் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது.

ஒலியைவிட 6 மடங்கு வேகத்தில் இயங்கும் இயந்திரத்தை (ஸ்க்ரேம்ஜெட்) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூனிலும் 2020-ஆம் ஆண்டு செப்டம்பரிலும் இந்தியா சோதனை செய்தது. ஒலியைவிட 13 மடங்கு அதிக வேகம் வரை பரிசோதனை செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது.

இந்தியாவைப் போல பிரான்ஸும் ரஷியாவுடன் இணைந்து ஹைப்பா்சானிக் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது.

சீனா, ரஷியா போல அமெரிக்க ஹைப்பா்சானிக் ஏவுகணைகளில் அணு ஆயுதம் பொருத்தாமல், சாதாரண குண்டுகளைப் பொருத்திப் பயன்படுத்த அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அவை மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறனுடன் உருவாக்கப்பட வேண்டும் என்பதால் அமெரிக்க ஹைப்பா்சானிக் ஏவுகணைகளை உருவாக்குவது சவால் மிக்கதாகும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT