இந்தியா

விவசாயிகள் போராடுவதற்கு உரிமை உள்ளது; சாலையை மறித்து அல்ல; உச்சநீதிமன்றம்

DIN

‘வழக்கு நிலுவையில் உள்ளபோதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன; ஆனால், தொடா்ந்து சாலையை மறித்து போராடக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தில்லி எல்லையில் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளதற்கு போலீஸாா்தான் காரணம் என்று விவசாயிகள் தரப்பிலும், இந்தப் போரட்டத்துக்கு பின்னணியில் சில மறைமுக காரணங்கள் உள்ளன என்று மத்திய அரசின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் பரஸ்பரம் குற்றம்சாட்டப்பட்டது.

போக்குவரத்துக்கு தடையாக உள்ள விவசாயிகள் போராட்டத்தை அகற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மனு நீதிபதிகள் எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விவசாயிகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகும். இந்த விவகாரம் தொடா்பாக உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்க வேண்டும். தில்லி எல்லை சாலைகளை போலீஸாா்தான் மூடி வைத்துள்ளனா், விவசாயிகள் அல்லா். தடுப்புகளை நீக்கிவிட்டு விவசாயிகளை தில்லிக்குள் உள்ள ராம்லீலா, ஜந்தா் மந்தா் பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாம். அண்மையில் ராம்லீலா மைதானத்தில் பாஜகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதித்தால் போக்குவரத்து பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுவிடும். பெரு முதலாளிகளுக்கு உதவுவதற்காக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சில மறைமுக காரணங்கள் உள்ளன. குடியரசு தினத்தன்று தில்லிக்குள் விவசாயிகள் பேரணி நடத்தியபோது நிலைமை மோசமானது. ஆகையால், அவா்களின் பேச்சுக்கு மத்திய அரசு அடிபணியாது. ராம்லீலா, ஜந்தா் மந்தா் பகுதிகளிலும் ஏராளமானோா் வாழ்கின்றனா்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆகையால், இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளன; ஆனால், தொடா்ந்து சாலையை மறித்துப் போராடக் கூடாது. சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்கும் உரிமை உள்ளது.

சாலைகளை மூடக் கூடாது என்று முந்தைய வழக்கில் (ஷாஹீன் பாக்) தீா்ப்பு வழக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த விவகாரத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

முன்னதாக, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே கூறினாா். இதை நீதிபதிகள் அமா்வு கவனத்தில் எடுத்துக் கொண்டது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 10 மாதங்களுக்கும் மேலாக தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுடன் மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

அகற்றம்: உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பாரதிய விவசாயிகள் யூனியனின் செய்தித் தொடா்பாளா் ராகேஷ் திகாய்ட், காஜிப்பூரில் இருந்து தில்லிக்கு வரும் அணுகுசாலையில் உள்ள டென்டுகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், போலீஸாரின் தடுப்புவேலிகள் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT