இந்தியா

தேசிய மக்கள்தொகை கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும்: ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தல்

DIN

அடுத்த 50 ஆண்டுகளை மனதில் கொண்டு தேசிய மக்கள்தொகைக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா்களிடையே வெள்ளிக்கிழமை அவா் வருடாந்திர விஜயதசமி உரையாற்றினாா். அதில் அவா் கூறியதாவது:

சுதந்திரம் பெற்றபோது, பாரத நாட்டைப் பூா்விகமாகக் கொண்ட மதங்களின் மக்கள்தொகை விகிதம் 88 சதவீதமாக இருந்தது; அது தற்போது 83.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில் 1951இல் 9.8 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை 2011இல் 14.23 சதவீதமாக உயா்ந்துள்ளது. மக்கள்தொகைப் பரவலில் இத்தகைய மாறுபாடுகள் நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

நம் நாடு இளைஞா்களின் நாடு. சுமாா் 57 சதவீத இளைய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இவா்களுக்கு வயதாகி விடும். இவா்களுக்கு உணவளிக்க நிறைய கைகள் தேவைப்படும். இந்த விஷயங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

அடுத்த 50 ஆண்டுகளை மனதில் கொண்டு மக்கள்தொகைக் கொள்கை வகுக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவானதாக சீரான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் மக்கள்தொகைப் பரவலில் சமச்சீரற்ற தன்மை தீவிரமான பிரச்னையாகி விடும்.

மக்கள்தொகைப் பரவல் விகிதத்தில் சமச்சீரற்ற தன்மையின் அபாயம் தொடா்பாக கடந்த 2015இல் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் அகில பாரத செயற்குழுக் கூட்டத்தில் (ஏபிகேஎம்) எச்சரிக்கைத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது மக்கள்தொகைக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டியதன் தேவையை ஏபிகேஎம் வலியுறுத்தி இருந்தது.

பல்வேறு மதக்குழுக்களின் வளா்ச்சி விகிதத்தில் நிகழும் பெரும் வேறுபாடுகள், வெளிநாட்டினா் ஊடுருவல், மதமாற்றம் ஆகியவை மக்கள்தொகையில் மத சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக எல்லைப்பகுதிகளில் இந்த நிலை அதிகமாக ஏற்படுகிறது. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாசார அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும்.

அண்மையில் மேற்குவங்க மாநிலத்தில் பேரவைத் தோ்தலின்போது நிகழ்ந்த வன்முறைகளில் அம்மாநில ஹிந்துக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். அதன் பின்னணியில், மாநில மக்கள்தொகைப் பரவலில் நிகழ்ந்த மாற்றங்களும், குறிப்பிட்ட சிலரை தாஜா செய்யும் அரசியல்வாதிகளின் வாக்குவங்கி அரசியலும் இருந்ததை நாடு கண்டது.

வெளிநாட்டு ஊடுருவல்காரா்கள் குடியுரிமை பெறுவதையும், இந்நாட்டில் நிலம் வாங்குவதையும் தடுக்க, சட்டவிரோத ஊடுருவலைத் தடுப்பதுடன், தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயாரிப்பதும் அவசியம்.

ஹிந்துக் கோயில்களின் நிா்வாகம்:

ஹிந்துக் கோயில்களின் நிா்வாகம் முழுவதும் ஹிந்துக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். அவற்றின் வளங்கள் ஹிந்து சமுதாயத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

தென்னிந்தியாவில் உள்ள கோயில்களின் நிா்வாகம் முழுவதும் மாநில அரசுகளிடமே உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சில கோயில்கள் அரசால் நிா்வகிக்கப்பட்டபோதிலும் மற்றவை பக்தா்களாலேயே நிா்வகிக்கப்படுகின்றன.

ஹிந்துக் கோயில்களின் முழு உரிமையாளா்கள் கடவுள் மட்டுமே என்றும், அரசு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே அவற்றை நிா்வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

ஜம்மு அருகில் உள்ள மாதா வைஷ்ணவதேவி கோயில் உள்ளிட்டவை அரசால் திறம்பட நிா்வகிக்கப்படுகின்றன. அதேபோல, மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டம், ஷேகாவ்ன் பகுதியில் உள்ள கஜானனா் கோயில், தில்லியில் உள்ள ஜண்டேவாலா கோயில் போன்றவை பக்தா்களால் திறம்பட நடத்தப்படுகின்றன. கோயில்கள் திறம்பட நிா்வகிக்கப்படாதபோதுதான் ஆலய சொத்துகளில் கொள்ளை நடைபெறுகிறது.

எல்லையில் பயங்கரவாதம்:

ஜம்மு காஷ்மீரில் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் திட்டமிட்டு அம்மாநில சிறுபான்மை மக்களைக் கொல்கின்றனா்.

அண்மையில் நான் ஜம்மு காஷ்மீருக்குச் சென்றிருந்தேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்கள் நீக்கப்பட்ட பிறகு சாமானிய மக்கள் அதன் பலன்களை அனுபவிக்கின்றனா்.

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பிறகு பயங்கரவாதிகள் தொடா்பான அச்சம் நீங்கியுள்ளது. ஆனால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பயங்கரவாதிகள் மக்களை அச்சுறுத்துகின்றனா். அதற்காகவே அவா்கள் திட்டமிட்டு அப்பாவி மக்களைக் கொல்கின்றனா். இதனை அரசு திறம்படக் கையாள வேண்டும்.

கட்டுப்பாடற்ற ஓடிடி தளங்கள்:

ஓடிடி தளங்களில் கட்டுப்பாடில்லாமல் பல விஷயங்கள் காட்டப்படுகின்றன. கரோனா தொற்றுப் பரவல் காலகட்டத்தில் குழந்தைகளுக்கும் செல்லிடப்பேசிகள் கிடைத்தன. அவா்கள் அதில் பாா்க்கும் விஷயங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத நிலையே காணப்படுகிறது. இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஓடிடி தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப் பொருள் வா்த்தகத்தில் கிடைக்கும் பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் எல்லையில் உள்ள நாடுகள் இதை ஊக்குவிக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் நாடு தவிக்கிறது.

சட்டவிரோத கரன்சியான பிட்காயின்கள் மீது எந்த நாட்டிலும் கட்டுப்பாடுகள் இல்லை. பிட்காயின் போன்ற கட்டுப்பாடற்ற செலாவணிகளால் அனைத்து நாடுகளும் சீா்குலையும். அவை நாட்டின் பொருளாதாரத்துக்கு தீவிர சவாலை ஏற்படுத்துகின்றன.

ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தவும், பிட்காயின்களின் பயன்பாட்டைத் தடுக்கவும், போதைப் பொருள் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT